காதலர் தின சிறப்புக்கவிதை ! – அ.ஈழம் சேகுவேரா - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 14, 2019

காதலர் தின சிறப்புக்கவிதை ! – அ.ஈழம் சேகுவேரா


(இ)ரயில்களே தோற்றுவிடுமாப்போல் வளைந்து நெளிந்து நீண்டு புகும், புழுதி அள்ளி எறியும் ஒற்றையடித்தெருக்களுக்குள்ளும்… அதன் கூடவே நிரைநிரையாக அணிவகுத்து காற்றுக்குத்தலைகோதும் பனைமரக்காடுகளுக்குள்ளும்… உச்சி வெயில் நேரம் தாகம் தீர்க்கும் தருக்கள் சகிதம், கிடுகு, தென்னைஓலை, பனைஓலை, பனைமட்டை, வாழைச்சருகு, பூவரசு, ஆமணக்கு, கிளிசெறியா, கிளுவை, கள்ளி, அளம்பல் என்று வேலிகளால் வகுக்கப்பட்ட நிலபுலங்களுக்குள்ளும்… சொக்கிக்கிடந்தவாறு,
சதா சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்கால் நீரின் (நி)சப்தத்துக்குக்கூட ஊறுவிளையாமல் நாழிகைப்பொழுதுகளும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர் கிராமிய வாழ்வியலின் ஒரு பக்க அழகுப்பதிவு!
காலக்கிரமத்தில்
அவள் பருவம் எய்தாள்.
வழமை போலவே
அவள் வீட்டுத்தெருவை
கடந்து செல்லும்
அவனது தலை,
ஏதோ இனம் புரியா
ஈர்ப்பால்
அவள் வீட்டுப்பக்கம்
அடிக்கடி திரும்பிக்கொள்கிறது.
ஏதுமறியா அவள்
வீட்டு வேலியோ
சட்டென நிமிர்வு கொள்கிறது.
வேலிக்குப்போட்டியாக,
எக்கி எக்கிப்பார்த்து
தலை வலி எடுத்ததால்
அவனது மிதிவண்டி
இருக்கையும் இயன்றவரை
உசத்தி பெற்றிற்று.
ஆயினும் வேலியின்
நிமிர்வை மிஞ்சியதாயில்லை.
‘காதல் எல்லாம் செய்யும்!’
இயலாமையின்
வெளிப்பாடாக
தன்னுள் விழுந்த
பொத்தல்களின் இரகசியம்
அவள் வீட்டு வேலிக்கு
மட்டுமே தெரியும்.
யார் அறிவார்?
வேலி அழுவதையும்…
காதல் சிரிப்பதையும்…
***
இலங்கை, முல்லைத்தீவிலிருந்து…
தாயக கவிஞர்
-அ.ஈழம் சேகுவேரா-
கருத்துகள் மற்றும் பகிர்வுகளுக்கு:
WeTamizhar@Gmail.Com