தமிழகத்தில் கிரெடிட் கார்டுகள் ஆன்லைன் மூலம் பணம் தருகிறோம் என்று விளம்பரம் செய்து, மற்றவர்களை கடன்காரர்களாக்கிவிட்டு அந்த பணத்தை வைத்து நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னையின் முக்கிய பகுதிகளான சூளைமேடு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, ஆவடி, ஆலந்தூர், வடபழனி, வேளச்சேரி என 10 இடங்களில் கால் சென்டர் என்ற பெயரில் மோசடிக் கும்பல் அலுவலகங்களை நடத்தியுள்ளது.
இந்த அலுவலங்களில் இருக்கும் கும்பல் லோன் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். அதன் பின் விசாரணை நடத்த சி.சி.பி என்றழைக்கப்படும் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு (வங்கி மோசடி) உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கோபிகிருஷ்ணன், அவரின் அம்மா, அப்பா என மொத்தம் 17 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.
அதன் பின் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கால் சென்டர்களின் வங்கி அக்கவுண்ட்களுக்கு பண பரிவர்த்தனை செய்யும் ஆப்ஸ்கள் மூலம் பணம் வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் இந்த ஆப்ஸ் நிறுவனங்களை நடத்துபவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அப்போது புதுச்சேரியைச் சேர்ந்த சிவா என்கிற சிவக்குமார், சந்திரன் என்கிற ரவிசந்திரன் மற்றும் கிருஷ்ணராஜு என்பது தெரியவந்ததால், பொலிசார் புதுச்சேரிக்கு விரைந்து சிவக்குமார் மற்றும் ரவிச்சந்திரனை பிடித்துள்ளனர்.
பொலிசார் வரும் தகவலை எப்படியோ தெரிந்து கொண்டே கிருஷ்ணராஜு தப்பிவிட்டதால், சிவக்குமார், ரவிசந்திரனிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், சிவக்குமார் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் இன்ஜினீயரிங் படித்துள்ளார். ரவிசந்திரன் ப்ளஸ் ஒன் படித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் மூளையாக இருந்து செயல்பட்டவர் கிருஷ்ணராஜு.
பணப் பரிவர்த்தனை செய்யும் ஆப்ஸ்களின் நிறுவனங்களிடம் கமிஷன் அடிப்படையில் இவர்கள் சில ஆப்ஸ்களை வைத்துள்ளனர்.
இதன் மூலமாகவே இவர்கள் போலி கால்செண்டர்களை நடத்தியுள்ளனர். அதன் பின் அந்த பணம் கோபிகிருஷ்ணனின் வங்கிக் கணக்குகளுக்கு வந்துள்ளது.
அந்த வழக்கில் இருவரையும் கைது செய்து விசாரித்தபோது சிவக்குமார், ரவிசந்திரனின் செல்போன்களுக்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வந்துள்ளன.
அப்போது அந்த போனில் பேசிய நபர் சார் எப்போது கிரெடிட் கார்டுக்கு பணம் வரும் என்று கேட்க, பொலிசாருக்கு அந்த இருவர் மீது சந்தேகம் வலுத்து விசாரித்த போது, கிரெடிட் கார்களுக்கு பணம் கொடுப்பதாக ஆன் லைனில் விளம்பரம் செய்து இவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அதாவது, கிரெடிட் கார்டுகளின் லிமிட் அடிப்படையில் பணம் தருவதாக கூறி, மக்களை ஏமாற்றியுள்ளனர்.
இவர்களின் பேச்சையும் கேட்டு, கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நபர்கள் கார்டுகளின் நம்பர், CCV நம்பர் உள்ளிட்ட விவரங்களை ரவிசந்திரன், சிவக்குமார், கிருஷ்ணராஜு உருவாக்கிய ஆப்ஸில் பதிவு செய்தால் சம்பந்தப்பட்டவர்களின் செல்போனுக்கு ஓடிபி எண் வரும்.
அந்த எண்ணையும் ஆன்லைனிலேயே ஆப்ஸில் பதிவு செய்தால் கிரெடிட் கார்டுக்கு பணம் விரைவில் வரும் என்ற மெசேஜ் வரும்.
அதன்பிறகுதான் இந்தக் கும்பல் தங்களின் கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளனர். கிரெடிட் கார்டு மூலம் பணம் வந்தவுடன் அதை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பபாமல் தங்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பிவிடுவார்கள்.
முகமே தெரியாமல் ஆன் லைனில் பணத்தை இழந்தவர்கள் சிலர் எப்படி புகார் கொடுப்பது என்று தவித்து வருவதாகவும், ரவிசந்திரன் சிவக்குமார், கிருஷ்ணராஜு செல்போன்களைத் தொடர்புகொண்டு பணத்தைக் கேட்டு நச்சரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த மோசடி மூலம் இந்த கும்பலின் வங்கி கணக்குகளுக்கு பல கோடி ரூபாய் வந்துள்ளது. இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ரவிசந்திரனும், சிவக்குமாரும் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் மற்றவர்களை கடன்காரர்களாக்கிவிட்டு அந்தப்பணத்தில் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று கூறியுள்ளனர்.
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜாமீனில் தற்போது வெளியில் வந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகங்களுக்குப் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆனால், சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் சிறப்பாக செயல்பட்டு ஆன் லைன் மோசடிக் கும்பலை கைது செய்துள்ளனர்.
மேலும் ஆன் லைன் பணப் பரிவர்த்தனை ஆப்ஸ்களைக் கவனமாக பொதுமக்கள் கையாள வேண்டும் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.