கோவை துடியலூர் அருகே மர்மமான முறையில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்த 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் கதறியபடி புகார் அளித்துள்ளனர்.
கோவை பன்னிமடை பகுதியை சேர்ந்த தம்பதியின் 6 வயது பெண் குழந்தை திப்பனூர் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை பள்ளி சென்று திரும்பிய சிறுமியை அவரது தாயார் அருகிலுள்ள கடைக்கு பொருட்கள் வாங்க அனுப்பியுள்ளார். கடைக்குப் போன சிறுமி நீண்ட நேரமாக திரும்பிவராததை அடுத்து பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர்.
தகவலறிந்து வந்த தடாகம் போலீசாரும் விடிய விடிய குழந்தையை தேடிய நிலையில், காலை அதே பகுதியிலுள்ள மற்றொரு வீட்டின் அருகே முட்டுச்சந்தில், முகத்தில் டி சர்ட் சுற்றப்பட்ட நிலையில் உடல் முழுவதும் காயங்களுடன் மீட்கப்பட்டார். மகளை மர்ம நபர்கள் பாலியல் வன்புணர்வு செய்து கொன்றிருக்கலாம் என பெற்றோர் கதறியது கேட்போரை அதிர வைப்பதாக இருந்தது.
சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.