முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது – பாரிய நினைவுக்கல் ஒன்றை காணவில்லை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 12, 2021

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது – பாரிய நினைவுக்கல் ஒன்றை காணவில்லை

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உள்ள நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) அடித்து நொறுக்கப்பட்டுள்ளதோடு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.நேற்று (12)மாலை ஆறு மணியளவில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதியில் கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கபட்டிருந்தது.


இந்த நிலையில் பொலிஸ் இராணுவம் புலனாய்வாளர்கள் இணைந்து விசாரணைகளில் ஈடுபட்டிருந்ததோடு நினைவுக்கல் நடுகை செய்யமுடியாது என தடை ஏற்படுத்தியிருந்தனர்.

இதனை தொடர்ந்து இரவோடு இரவாக அப்பகுதி இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்ததோடு முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் இராணுவ தடை ஏற்படுத்தப்பட்டு உள்நுழைய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இரவோடு இரவாக நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததோடு பொது நினைவுத்தூபியும் அடித்து உடைத்தெறியபட்டுள்ளது .


நினைவுக்கல் இருந்த இடம் தெரியாது அகற்றி செல்லப்பட்டுள்ளதோடு பொது நினைவுத்தூபியும் உடைக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 கிலோவுக்கு அதிகமான எடையை கொண்ட நினைவுக்கல் கனரக வாகனங்களை கொண்டு அகற்றி செல்லப்பட்டுள்ளது.


இரவிரவாக அப்பகுதி முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டிருந்ததாகவும் இராணுவ வாகனங்கள் சுற்றி திரிந்ததாகவும் அயலில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.


உடைக்க பட்டுள்ள நினைவு தூபியை சூழ இராணுவ சப்பாத்து அடையாளங்களை ஒத்த அடையாளங்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.