போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலானா குற்றச்சாட்டுக்களுக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு – மங்கள சமரவீர அதிரடி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, January 4, 2021

போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலானா குற்றச்சாட்டுக்களுக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு – மங்கள சமரவீர அதிரடி

 இறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச சர்வதேசத்திற்க்கு வாக்குறுதி வழங்கியிருந்தார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர மங்கள சமரவீர தெரிவித்தார்.


இலங்கை இராணுவம் படுகொலைகளில் ஈடுபடவில்லை. போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. இதை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரிய சாட்சியங்களுடன் இந்த முறை நிரூபிப்போம். நாம் எதற்கும் அஞ்சமாட்டோம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தன மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.


இது தொடர்பில் வினவியபோதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,


அது தொடர்பில் அப்போதய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக இருந்த பான் கீ – மூனிடம் இணைந்து ஆவணங்களில் மஹிந்த கைச்சாத்திட்டும் இருந்தார். போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரத்துக்கு மஹிந்தவே முழுப்பொறுப்பு.


இறுதிப்போரில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லையெனில் ஐ.நாவின் கூட்டு உடன்படிக்கையில் அன்று மஹிந்த கையெழுத்திட்டிருக்கக்கூடாது.


போர்க்குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. ஏனெனில், அவரும் போர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய நபராவர் .


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஒவ்வொரு தடவையும் வாய்க்கு வந்த மாதிரி பேசுகின்றார். போர்க்குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்கு அவருக்கும் எந்த அருகதையும் கிடையாது. அவரின் பொறுப்பற்ற கருத்துக்கள் சர்வதேச அரங்கில் இலங்கையைத் தலைகுனிய வைக்கும்.


போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை மீதான சர்வதேச விசாரணையைத் தவிர்க்கும் வகையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கியிருந்தது. அதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், இராணுவ அதிகாரிகளையும் மின்சாரக் கதிரையில் இருந்து நாம் காப்பாற்றினோம்.


கோத்தாபய அரசு தற்போது கூறுவது போல் ஜெனிவாவில் இராணுவத்தினரையும் ராஜபக்ச குடும்பத்தினரையும் நல்லாட்சி அரசு காட்டிக்கொடுக்கவில்லை. அன்று பான் கீ – மூனுடன் இணைந்து மஹிந்த ராஜபக்சவே நாட்டினைக் காட்டிக் கொடுத்தார்.


இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து கோட்டாபய அரசு விலகிக்கொண்டமை முற்றிலும் தவறானது. இது பாரிய விளைவுகளை ஜெனிவாவில் ஏற்படுத்தும்.


இது பொருளாதார ரீதியில் மோசமான நிலைமையையும் இலங்கைக்குத் தோற்றுவிக்கக்கூடும். சர்வதேச மட்டத்தில் இலங்கை தனிப்படுத்தப்படுத்தப்படவும் கூடும். இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டிய விடயத்தை இன்று அரசு சர்வதேச அரங்கில் ஊதிப்பெருப்பித்துள்ளது, என்றார்.