நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று (28) யாழ்ப்பாணத்தில் போராட்டம் இடம்பெற்றது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் பின்புறமாக உள்ள நல்லை ஆதீனமுன்றலில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று தீவிரம் பெற்று அரசியல்கைதிகளும் பாதிக்கப்பட்டு, நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தியும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் இடம்பெற்றது.
கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளை கொல்லாதே, விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய், கொல்லாதே கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளும் மனிதர்களே, சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியா உள்ளிட்ட
பல்வேறு கோஷங்களை இதன்போது எழுப்பியிருந்தனர்.
தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், தமிழ்தேசிய கட்சியின் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் க.சுகாஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், யாழ் பிரதி முதல்வர் ஈசன், முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், சபா.குகதாஸ், ச.சுகிர்தன், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.