தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் மீது தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற இருந்ததாகவும் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சுமந்திரனுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு தற்போதைய அரசாங்கத்திலும் வழங்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் ஒன்று நடைபெற இருக்கின்ற நிலையில் பல கட்சிகளும் இதில் போட்டியிடுகின்றன.
ஏற்கனவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாகவும் அந்த அச்சுறுத்தல் தொடர்ந்து்ம் இருப்பதாக தேசிய புலனாய்வுப் பிரிவின் அறிக்கைக்கு அமையவும் சுமந்திரனின் அதிரடிப்படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழமையாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் ஆறு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது அற்கு மேலதிகமாக பத்து விசேட அதிரடிப்படையினர் அவரின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்படி தற்போது பதினாறு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.