மட்டக்களப்பில் மீன் வியாபாரியை பின்னாலிருந்து மோதிக் கொன்ற வாகனம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 14, 2020

மட்டக்களப்பில் மீன் வியாபாரியை பின்னாலிருந்து மோதிக் கொன்ற வாகனம்!

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் மீயான்குளம் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து தொழில் நிமித்தம் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் ஓட்டமாவடியில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணம் செய்த சிறியரக வட்டா வாகனம் பின்னால் வந்து மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் ஓட்டமாவடி 1 ஹூதாப்பள்ளி வீதியை சேர்ந்த கல் வியாபாரி வரிசை முஹம்மது கலீல் றகுமான் (48) என்பவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் ஓட்டமாவடியைச் சேர்ந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

மரணமடைந்தவரின் குறித்த நபரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த சம்பவத்தினை கேள்வியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார்.