பொதுபலசேன அமைப்பின்பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்வரும் செப்ரெம்பர் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, விசாரணை திகதி குறிக்கப்பட்டது.
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையான குருஹகந்த ரஜாமகாவிகாரையின் விகாராதிபதி உயிரிழந்தபோது, நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய சூழலில் தகனம் செய்த விவகாரத்தில் அவர் மீது தொடரப்பட்ட, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலேயே திகதி குறிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி சாந்தி சிறிஸ்கந்தராசா சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஞானசார தேரர் மற்றும் முல்லைத்தீவு பகுதிக்கு பொறுப்பாக செயற்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.