அக்கரைப்பற்று கொரோனா தொற்று-திருக்கோவில் பிரதேசம் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 11, 2020

அக்கரைப்பற்று கொரோனா தொற்று-திருக்கோவில் பிரதேசம் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டது!



அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பகுதிகளுக்குள் வெளிப் பிரதேசத்தில் இருந்து உட்செல்லவோ அங்கிருந்து வெளியிடங்குளுக்குச் செல்லவோ மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை இன்று (சனிக்கிழமை) முதல் அமுலுக்கு வருவதாக திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் ஆர்.டபிள்யூ.கமல்ராஜ் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளர் ஒருவர் இனங்காணப்பட்டார். இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர் பிரதேச சுகாதார பணிப்பாளர் பொதுசுகாதார உத்தியோகத்தர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கலந்துகொண்டு இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதேசத்தில் நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது சமூக இடைவெளிளைப் பேணுவதற்காக பிரதேசத்தின் பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டு விநாயகபுரம் பொதுசந்தையிலும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மைதானத்திலும், தம்பிலுவில் பொது சந்தைப் பகுதியில் நிரந்தரமாக உள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் என மூன்று பிரதேசங்களில் சந்தை வியாபார நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்களான பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகள் போன்றவை தவிர ஏனைய கடைகள் மறு அறிவித்தல் வரை திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் அந்தந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சந்தைகளில் அந்த பிரதேச மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருக்கோவில் பிரதேசத்திற்கு உள்நுளையும் வீதிகளான தாண்டியடி சாகாமம் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச எல்லைப் பகுதிகளில் இராணுவ, பொலிஸ் வீதி சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு திருக்கோவில் பிரதேசத்திற்குள் ஏனைய பிரதேச மக்கள் உட்செல்லவோ அங்கிருந்து வெளி பிரதேசத்துக்கு செல்லவோ முடியாதவாறு சோதனை நடவடிக்கை இடம்பெறும். அதேவேளை சோதனைச் சாவடியில் வைத்து அங்கு வருவபர்களுக்கு மேல் தொற்று நீக்கி வீசப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணுவதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் விளையாட்டுக் கழகங்களுடைய இளைஞர்கள் ஈடுபடவுள்ளதுடன் இந்த நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு பொதுமக்கள் கூடும் இடங்களில் தொற்று நீக்கி தொடர்ச்சியாக தெளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொற்று நோயை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதேச சபை தவிசாளர் கேட்டுக்கொண்டுள்ளார்