கொரோனா வைரஸின் பாதிப்புகளை உலகிற்கு மறைத்தல், கொரோனா குறித்த தகவல்கள் அறிந்தவர்களைக் கைது செய்தல், உலக நாடுகளுக்கு உயிர் சேதத்தையும், பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்ட சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் மிசோரி மாநில அரசு சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக உலக அளவில் முதல் வழக்கை மிசோரி மாநிலம் தொடர்ந்துள்ளது. மிசோரியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாநில அரசு சட்டத்தரணி அட்டர்னி ஜெனரல் எரிக் ஸ்மிட் சீன அரசுக்கும், ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் அமெரிக்காவில் மோசமான பாதிப்பை கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை அங்கு 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 8 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனியிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஈரமான விலங்குகள் சந்தையில் வௌவால்களிடம் இருந்துதான் பரவியதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற நாளேடான த வோஷிங்டன் போஸ்ட், த ஃபொக்ஸ் நியூஸ் சனல் ஆகியவை இரகசியமாகச் சேகரித்த செய்திகளின் அடிப்படையில் சார்ஸ்-கோவிட்-19 வைரஸ் வௌவால்களிடம் இருந்து பரவவில்லை. அது சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் சீன அரசின் ஆய்வகங்களிலிருந்து கவனக்குறைவாகக் கையாண்டதால் பரவியுள்ளது எனச் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த செய்தி வெளியானதிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ ஆகியோர் சீனாவுக்கு எதிராக கடும் அதிருப்தியுடன் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் மிசோரி மாநிலத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் எரிக் ஸ்மிட் சீனாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
”சீனாவில் கொரோனா வைரஸ் உருவாகி அடுத்தடுத்து பரவிய வாரங்களில் அந்நாட்டு மக்களுக்கே சீன அதிகாரிகள் உண்மைத் தகவலை மறைத்து ஏமாற்றி விட்டனர். முக்கியமான உண்மைகளை மறைத்து, இந்த உண்மைகளை அறிந்தவர்களைக் கைது செய்துள்ளனர். மனிதர்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் என்ற ஆதாரங்களையும் வெளியிடாமல் சீன அதிகாரிகள் மறைத்து விட்டார்கள்.
பல இலட்சம் மக்கள் பாதிக்கப்படப் போகிறார்கள் என்பதை அறிந்தே மருத்துவ ஆய்வு அறிக்கைகளை அழித்துள்ளனர். மேலும், மருத்துவர்களுக்கு தேவைப்படும் பிபிஇ பாதுகாப்பு உடைகளை ஏராளமாக உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்ய இருப்பு வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உலக அளவில் ஈடுசெய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. மனிதர்களுக்கு நோய், பொருளாதாரப் பாதிப்பு, வேதனை, உயிரிழப்புகளைக் கொடுத்தது. மிசோரி மாநிலத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். பலர் குடும்பத்தை இழந்து அனாதையாகி விட்டார்கள். சிறுதொழில்கள் மூடப்பட்டுள்ளன. பலர் உணவுக்காகவும், பணத்துக்காகவும் கையேந்துகிறார்கள்.
உலகிற்கு கொரோனா வைரஸின் ஆபத்து, இயல்பு குறித்து தெரிவிக்காமல், உண்மையைக் கண்டறிந்தவர்களைக் கைது செய்து, உலகிற்கு கொரோனாவைப் பரப்ப சீனா காரணமாகிவிட்டது. உலகிற்குப் பொய் உரைத்துவிட்டது சீனா. கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவும் எனத் தெரிந்திருந்தும், அந்த விவரங்களை உலக சுகாதார அமைப்பிடம் சீனா சொல்லாமல் மறைத்துவிட்டது.
கொரோனா வைரஸ் குறித்த நல்ல தெளிவு இருந்தும் அதை சீன அதிகாரிகள் வேண்டுமென்றே மறைத்து விட்டார்கள். சீனாவின் புத்தாண்டுக்கு 1.75 இலட்சம் மக்களை வூஹான் நகரிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல சீன அரசு தெரிந்த அனுமதித்துள்ளது. இது நியூயோர்க் டைம்ஸ் நாளேடு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அறிந்தே மக்களை பல்வேறு நாடுகளுக்கு பயணிக்க சீனா அனுமதித்துள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு செய்தது, ஆபத்தை விளைவித்தது, பொருளாதார சேதம், உயிர் சேதம் ஆகியவற்றுக்கு சீனா இழப்பீடு வழங்க வேண்டும்” .
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த வழக்குத் தொடரப்பட்டதை அறிந்த அமெரிக்க உளவுத்துறைக்கான செனட் குழுவின் உறுப்பினர் செனட்டர் பென் சாசே வரவேற்றுள்ளார். கடந்த வாரம் எம்.பி.க்கள் கிறிஸ் ஸ்மித், ரான் ரைட் ஆகியோர் சீனாவுக்கு எதிராக சட்ட வரைவைத் தாக்கல் செய்துள்ளனர்.