முகநூல் பக்கங்களில் வெளியான போலியான செய்திகளை வன்மையாக கண்டிக்கிறேன்-ஏ.எல்.எம்.சலீம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 3, 2020

முகநூல் பக்கங்களில் வெளியான போலியான செய்திகளை வன்மையாக கண்டிக்கிறேன்-ஏ.எல்.எம்.சலீம்

கடந்த சில நாட்களாக சில முகநூல் பக்கங்களில் என்னை சம்பந்தப்படுத்தி வெளியான உண்மைக்குப் புறம்பான செய்திகள் தொடர்பாக எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என முன்னாள் சட்டம் ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளரும்

சாய்ந்த்தமருது, அக்கரைப்பற்று முன்னாள் பிரதேச செயலாளரும் தேசிய காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் ஏ.எல்.எம். சலீம் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது...

சமூகமும், நாடும் மற்றும் உலகமும் கொரோனா வைரஸினால் பயங்கர விளைவுகளை எதிர்நோக்கியுள்ள இந்த சூழ்நிலையில் அரசியல் வங்குரோத்து நிலையிலுள்ள சிலர் இவ்வாறான சில்லறைத்தனமான போலியான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் தங்களது குறுகிய அரசியல் இலக்குகளை அடையலாம் என நினைப்பது பகற் கனவாகவே முடியும்.

உண்மையிலேயே தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எல்.எம் அதாவுல்லா அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட தீர்க்கமான முடிவின் காரணமாக தனித்து எங்களது தனித்துவத்தைப் பாதுகாத்து தேர்தலில் போட்டியிடுவதானது சில அரசியல்வாதிகளுக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் ஜனாஸாக்களின் விடயத்தில் எமது கட்சியும் அதன் தலைவரும் இவ் இக்கட்டான கால கட்டத்தில் பல முயற்சிகளை எதுவித ஆரவாரமும், ஆர்ப்பரிப்புமின்றி மேற்கொண்டு வருவது எமக்கும், நடுநிலையாக சிந்திக்கும் அனைவருக்கும் தெரிந்த விடயம்.

அத்தோடு கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவாக மரணித்த எல்லோருடைய குடும்பங்களுக்கும் எங்களது அனுதாபங்களை தெரிவிப்பதுடன், சுகவீனமுற்றிருக்கும் அனைவரும் விரைவில் பூரண சுகமடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டியவனாக,

மேலும் கொரோனா அச்சத்தால் முழு உலகமும் அச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் இவ்வாறான சில்லறைத்தனமான அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகி, நற் செயற்பாடுகளை முன்னெடுக்க அனைவரும் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்