கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீள கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சியில் உள்ள கட்சிகள் மற்றும் அணிகள் பல ஒன்றிணைந்து, ஜனாதிபதிக்கு கூட்டு யோசனையொன்றை கையளித்துள்ளன.
இதில், மீண்டும் நாடாளுமன்றம் மீள கூட்டப்பட்டால் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும், தமது மாத கொடுப்பனவுகள் கூட வேண்டாம் என்றும் உத்தரவாதமளித்துள்ளனர். அத்துடன், எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளன.
சஜித் பிரேமதாசா, ரணில் விக்கிரமசிங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், இரா.சம்பந்தன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கூட்டாக இதில் கையொப்பமிட்டுள்ளனர்.
அந்த யோசனை அறிக்கை-
2020 மார்ச் 2 நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது எதிரணியில் இருந்த நாடாளுமன்ற பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும், அணிகளுமாகிய நாம் நாம் பின்வருமாறு கூற விரும்புகிறோம்
கோவிட்-19 மற்றும் அதனால் உருவாகியுள்ள பொது சுகாதார இடரின் பின்னணியிலும் அதை கட்டுப்படுத்த அரசாங்கங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கையிலும் புதிய பல சவால்கள் தோன்றியுள்ளன. இத் தொற்று நோய் பரவுவதை நாம் கட்டுப்படுத்தலாம் என்று சில நாட்களுக்கு முன்பு இருந்த நம்பிக்கை துரதிர்ஷ்டவசமாக இப்போது தளர்கிறது. இதன் பரவுதலை அடுத்த சில வாரங்களுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் பொருளாதார சமூக அரசியல் தளங்களில் நாடு பல இடர்களை சந்திக்க நேரிடும்.
நூற்றுக்கணக்கானவர்களுக்கு கோவில் 19 தொற்றியுள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்து இருக்கிறார்கள். தங்களது பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் முன்னிலை சுகாதார ஊழியர்கள் எம்மை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்போடு செய்கிறார்கள். எமது அரசியல் தீர்மானங்களால் அவர்களது அர்ப்பணிப்பான உழைப்பு வீண் போகக்கூடாது
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இருப்பதாலும் தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழல் இல்லாத காரணத்தாலும், குறிப்பாக நிலையற்ற அரசியல் சூழல் காணப்படுகிறது. ஜூன் 20ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த புதிய திகதி ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது. நாட்டின் சுகாதார நிலைமை மாற்றமடைவதன் அடிப்படையில் இந்த திகதி மறுபரிசீலனை செய்யப்படும் என்பதையும் ஆணைக்குழு ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளது
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழல் ஏற்பட சாத்தியம் இல்லை என்று நாம் நியாயமாக தீர்மானிக்க முடியும். அண்மித்த காலத்தில் தேர்தல் ஒன்றை நடத்தி மக்களை தேவையற்ற சுகாதார இடர் ஒன்றிற்குள் நாம் தள்ள முடியாது. நமது நாட்டு மக்கள் எப்பொழுதுமே தேர்தல் பரப்புரைகளில் ஊக்கமாக பங்குபற்றி, பெரும் எண்ணிக்கையில் திரண்டு வாக்களித்து ஜனநாயகத்திற்கான தமது அர்ப்பணிப்பை காண்பித்துள்ளனர். நீதியும் சுதந்திரமானதுமான தேர்தல் முழுமையான பிரச்சார நடவடிக்கையை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். இப்படியான நடவடிக்கை நாடு முழுவதும் இந்த வைரஸ் பரவும் அபாயத்தை அதிகரிக்கும். கடந்த இரண்டு வாரத்தில் இந்த தொற்று அதிகரித்த விதத்தை நாம் அறிவோம்.
மற்றெல்லா ஜனநாயக நாடுகளைப் போலவே எமது நாடும் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கல்துறை, நீதித்துறை என்ற மூன்று தனித்துவமான அதிகாரங்களைக் கொண்ட நிறுவனங்களால் ஆளப்படுகிறது. சட்டத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு இம் மூன்று துறைகளும் இன்றியமையாதன. முன்னெப்பொழுதும் சந்தித்திராத சவாலொன்று ஏற்பட்டுள்ள இவ்வேளையில்- மற்றைய நேரங்களை விட- இவற்றின் செயற்பாடுகள் அத்தியாவசியமாகின்றன. ஆனால் நாடாளுமன்றம் செயல்பாடற்று இருக்கும் இந்த தருணத்தில் அந்தச் சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதியும் அரசியலமைப்பின் உறுப்புரை 70(7) இல் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தை கூட்டும் அதிகாரத்தை பிரயோகிக்க மறுக்கிறார். தேர்தலும் தொடர்ச்சியாக பிறபோடப்படும் சூழலில், நாடாளுமன்றமும் நீண்ட காலத்திற்கு செயலிழந்த இருப்பதற்கான அபாயம் நிலவுகின்றது.
இந்த இடரின் மத்தியில் எழுந்துள்ள பல அவசர அவசரமான ஆட்சி விடயங்களை தீர்த்து வைப்பதற்கு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்டி அதன் மூலம் அரசியல் கட்சிகளினாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறுவது சிறந்தது என்பது நமது உண்மையான நம்பிக்கையாகும். எழுந்துள்ள பொது சுகாதார சிக்கலுக்கு தேவையான புதிய சட்டங்களை இயற்றுவதும், பொது நிதியிலிருந்து பணம் எடுப்பதற்கான நாடாளுமன்றம் அனுமதி வழங்குவது என்பன நாடாளுமன்றம் செய்யக்கூடிய சில முக்கியமான அவசர கடமைகளாகும்.
அண்மைக் காலத்தில் நிறைவு பெறுவதற்கு சாத்தியமில்லாத முன்னெப்பொழுதும் சந்தித்திராத பேரிடர் ஒன்றுக்கு நாம் அனைவரும் முகம் கொடுத்துள்ளோம். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இந்த சவாலை முறியடிப்பதற்கு ஜனாதிபதிக்கு எமது பொறுப்புணர்வு கலந்த பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த பேரிடரின் மத்தியிலும் நாட்டினதும், மக்களினதும் நன்மைக்காக தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை தவிர்த்து செயற்பட வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளினதும், அரசியல் தலைமைகளினதும் கடமை என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.
மேற்கூறியவற்றை அடைந்து நாட்டில் ஆட்சியானது முறையாகவும் சட்டபூர்வமாகவும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவும் அமைவதற்காக நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க நாம் தயார். இக்காலத்தில் எமக்கு சம்பளம் வேண்டாம் என்றும், அரசாங்கத்தை கவிழ்க்க முனைய மாட்டோம் என்றும், அரசாங்கத்தின் எந்த சட்டபூர்வமான செயற்பாட்டிற்கும் தடங்கல் விதிக்க மாட்டோம் என்றும் நாட்டு மக்களுக்கு நாம் உறுதி கூறுகின்றோம். ஊரடங்கு சட்டம் சட்டபூர்வமாக பிரகடனப்படுத்தப்படாத போதும் அதைப் பேணுவதில் அரசாங்கத்திற்கு உதவி வழங்கி வருவதில் இருந்து எமது நல்லெண்ணத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளோம்.
இந்த சூழ்நிலையில் பொறுப்புணர்வுடனான எமது ஒத்துழைப்பு வழங்கும் எண்ணத்தை ஏற்று 2020 மார்ச் 2ம் திகதியிட்ட பிரகடனத்தை இரத்து செய்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வைரஸை ஒழிப்பதற்கும், அனைத்தும் சட்டபூர்வமாகவும் அரசியலமைப்புக்கு உட்பட்டும் நடைபெறுவதற்கு ஆவண செய்ய செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்களை நான் கேட்டுக் கொள்கிறோம். தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்ட பின்பு ஜனாதிபதி அவர்கள் நாடாளுமன்றத்தை மீண்டும் கலைக்க முடியும்.
மாற்று செயற்பாடாக ஜனாதிபதி அவர்கள் குறைந்தது அரசியலமைப்பின் 70(7)ஆவது உறுப்புரையின் கீழ் கழைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும். பொறுப்புணர்வுடனான ஒத்துழைப்புக்கான இந்த யோசனையானது எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் இதய சுத்தியோடு நாட்டினதும் மக்களினதும் நன்மைக்காக மட்டுமே செய்யப்படுகிறது என்பதில் ஜனாதிபதி அவர்கள் முழு நாடும் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.