கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் பெரும் மனித அழிவை ஏற்படுத்திவரும் நிலையில் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைக் கடந்துள்ளது.
அமெரிக்காவில் முக்கிய மாநிலங்கள் வைரஸ் பரவலுக்கு இலக்காகியுள்ளதுடன் கணிசமான மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 342 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 50 ஆயிரத்து 236 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நேற்று மட்டும் அங்கு புதிய நோயாளர்கள் 31 ஆயிரத்து 900 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 8 இலட்சத்து 86 ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 47 இலட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மொத்தமாக பாதிக்கப்பட்ட 8 இலட்சத்துக்கும் அதிகமானவர்களில் 85 ஆயிரத்து 922 பேர் மட்டுமே இதுவரை குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலமே மோசமாக வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்குமட்டும் நேற்று 507 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 20 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 2 இலட்சத்து 70 ஆயிரம் பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
இதனைவிட நியூஜெர்ஸி மாகாணத்தில் நேற்று 365 பேர் மரணித்துள்ளனர்.