கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக ரமழான் காலத்தில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 18, 2020

கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக ரமழான் காலத்தில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய நிவாரணப் பணிகள்

கோவிட்-19 வைரஸ் பரவலால் உலகம் மௌனித்துப் போயிருகிறது. இந்த வைரஸின் தாக்கங்கள் பற்றி பல்துறைசார்ந் ஆய்வுகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, உலகப் பொருளாதாரம் மௌனித்துப் போய் இருக்கிறது. இதனால் மக்கள் உயிர்வாழ்வதற்கான போதிய பணம் அற்ற சூழலும் உருவாகியுள்ளது.

உலகப் பொருளாதாரம் ஐக்கிய அமெரிக்க டொலர் 2 ரில்லியன் தொடக்கம் 4.1 ரில்லியன் வரை நட்ட இழப்பைச் சந்திக்குமென்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தொழில்துறைகள் பூட்டப்பட்டுள்ள நிலையால் தின வருமானத்தில் வாழ்ந்த மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. வறுமையில் (Poverty) இருந்த குடும்பங்கள் பட்டினியில் (Hunger) பீடிக்கப்பட்டுள்ளன. இதற்கான தீர்வுகள் பற்றி ஒவ்வொரு சமூக மட்டத்திலும் சிந்தனைகள் எழுந்துவருகின்றதை அவதானிக்கலாம்.

இந்த கட்டுரையின் மூலம் வறுமைக் கோட்டில் வாழ்ந்த மக்கள் அன்றாடத் தொழில் முடக்கத்தால், பட்டினிக் கோட்டிற்கு தள்ளப்பட்டு, அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகளிலிருந்து மீட்க, சமூக அமைப்புகளின் வகிபாகத்தினை வலியுறுத்தும் வகையில் அமைத்துக் கொள்வதே பிரான நோக்கமாகும். (வறுமை, பட்டினி பற்றிய கோட்பாட்டு விளக்கங்களும் புள்ளிவிபரங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.)

உத்தரப்பிரதேச மாநிலம் பதோய் மாவட்டத்தில் தினக்கூலியாக இருக்கும் பெண் ஒருவர் தொழில் முடக்கம் காரணமாக சாப்பாடு சரிவரக் கொடுக்க முடியாததால் தன்னுடைய ஐந்து குழந்தைகளை ஆற்றில் வீசினார் என்ற செய்தி 2020.04.13ம் அன்று பார்க்கக்கிடைத்தது. 

இதுபற்றி இந்திய முன்னணி செயற்பாட்டாளர்கள் பல்வேறு கருத்துக்களையும் தீர்வுகளையும் எழுதிவருகிறார்கள். இந்த நிலை எமது பிரதேசத்திலும் ஏற்பாடமல் தடுக்க வேண்டும். இது சமூகப் பொறுப்பும் ஆகும்.

எனவேதான், கோவிட் 19 ரமழான் கால நிவாரணப் பணிகளுக்கான சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பு பற்றியும் அது எந்த நோக்கத்தினை அடைய வேண்டும் என்பது பற்றியும் பேசிவிடவேண்டும் என்பதாலேயே இந்த கட்டுரை எழுதத்தூண்டியது.

உண்மையில், பட்டினியால் பீடிக்கப்பட்டுள்ள மக்கள் போசாக்கின்மை காரணமாக இறக்கும் நிலை ஏற்படுகின்றது. இவ்வாறான இறப்பு வீதம் இலங்கையில் மிகக் குறைவானதாக இருப்பது அதிஸ்டமே. ஆனால் பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள மக்கள் (Undernourished People) தொகுதியை வெகுகாக உருவாக்கிவிடும். 

இத் தொகுதியினர் விபரீத முடிவுகளை எடுக்கவும் தலைப்படுவர். குறிப்பாக, றமழான் காலத்தில் நோன்புடன் இருக்கும் போது பட்டினியால் பீடிக்கப்பட்டுள்ள மக்கள் உடல் உள சார்ந்த பல பாதிப்புக்கும் உள்ளாக நேரிடும். எனவே இவ்வாறான மக்களுக்கு உதவுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை உறுதிப்படுத்தலாம். இதுதான் சமூகப் பொறுப்பு.

இப்பணியிலுள்ளவர்களின் தலையாய பொறுப்பு அவர்கள் உதவும் எல்லையை முதலில் தீர்மானிக்க வேண்டும். அதாவது கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை அதிகாரப்பரப்பு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு முன்மொழியப்பட்ட கிராம சேவகர் பிரிவுகள். 

இதில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் அதிகாரப் பரப்பின் கீழ் 14 கிராம சேவகர் பிரவுகளும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு முன்மொழியப்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் அதிகாரப் பரப்பில் 11 கிராம சேவகர் பிரிவுகளுமாக மொத்தமாக 25 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்கும். (இதிலுள்ள தமிழ், சிங்கள குடும்பங்களையும் உள்ளடக்குவது காலப் பொருத்தமாகும்.)

இந்த கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள வறுமை நிலையில் வாழும் குடும்பங்களின் விபரங்களை இந்த குழு திரட்டியெடுக்கவேண்டும். எழுமாறாக செய்யும் எந்த செயற்பாடுகளும் அதன் நோக்கத்தை அடைவதில்லை என்பதை கருத்திற் கொண்டு இந்த ஆரம்பக்கட்ட செயற்பாட்டை இந்த குழு செய்து முடிக்கவேண்டும். இது இலகுவான காரியம் என்பதால் உரிய கிராம சேவகர் மட்டங்களில் இந்த தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

வறுமை நிலையிலுள்ள குழுக்களை ஒவ்வொரு தலைப்புகளாக பிரிப்பது நல்லது. உதாரணமாக, விவசாயி, மீனவன், கடை வேலையாள், மூத்த பிரஜைகள், அங்கவீனமானோர், பாரிய நோய்த்தக்கமுள்ளோர், சமுர்த்தி பெறுனர் மற்றும் அதற்கு விண்ணப்பித்துள்ளோர், தினக்கூலி என்று பிரித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு கிராம சேவகர் பிரிவுகளிலிருந்து கிடைக்கும் பெயர் பட்டியலை தொகுத்து, பகுப்பாய்வு செய்து கிராம சேவகர் பிரிவுக்கான முன்னுரிமைப் பெயர்ப்பட்டியலை தயாரிக்கவேண்டும். 

25 கிராம சேவகர் பிரிவுகளிலும் வாழும் பயனாளிகளின் முன்னுரிமைப் பெயர் ஒழுங்கில் முதல் கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம் என்று பணம் சேரும் அளவிற்கு பொருள் வினியோகத்தினை செயற்படுத்தலாம். 

இதனால் இந்த அமைப்பின் அதிகாரப் பரப்பிலுள்ள அனைவருக்கும் பொருள் ஒரே நேரத்தில் சென்றடையும். இவ்வாறு செய்யும் போது சமூக மட்டத்தில் இந்த அமைப்பு மீது நம்பிக்கை கிடைக்கும். அல்லாது போனால் ஏலவே கல்குடா உலமா சபையால் முன்னெடுக்கப்பட்ட உலர் உணவு வினியோகம் போல் இதுவும் ஆகிவிடும்.

மேலும், இவ்வாறு முதன்மைத் திட்டம் (Master Plan) தயாரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் செலாற்றுவதும் இலகுமாக அமைந்துவிடும். தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பொருள் வினியோகம் செய்யும் போது ரூபா 10,000 பெறுமதியான பொருள் வினியோகம் செய்வது பொருத்தமாக அமையும். 

இதனை இரண்டு கட்டங்களாக அமைத்துக் கொள்ளலாம். ரூபா 5,000 பெறுமதியான பொருட்களை முதல் கட்டமாகவும், குறிப்பிட்ட நாட்கள் கழிந்து ரூபா 5,000 பெறுமதியான பொருட்களை இரண்டாம் கட்டமாகவும் பகிர்ந்தளிக்கலாம். இதில் பயனாளிகளின் தேவைக்கு ஏற்ப இரண்டாம் கட்ட பொருள் பகிர்வினை செயற்படுத்தலாம். முதலாம் கட்ட பணியை முடித்த பின்னர் ஏற்படும் கள அனுபவம் மூலம் இரண்டாம் கட்ட பகிர்வினை அமைத்துக் கொள்ளலாம்.

மேலும், போதுமான ஆளணி, வாகன வசதி, கொள்வனவின் போது கையாளும் பெறுகை நடைமுறை, இறுதிக் கணக்கு, முறைப்பாட்டு இலக்கம் போன்ற மனிதவள முகாமை மற்றும் நிதி முறைமைகளை இவர்கள் கவனம் செலுத்தலும் வேண்டும்.

சமூக கள உழைப்பின் போது நாம் போடும் 10 திட்டங்களும் பூர்த்தியாக நிறைவு செய்வது கடினமானது. இதுதான் எதார்த்தம். 8 திட்டங்கள் வெற்றிகரமாக அமையும். 02 திட்டங்கள் தோல்வி அடையும். இந்த 02 திட்டங்களும் ஏன் தோற்றது என்று ஆராய்ந்து மீள் செயற்பாட்டு திட்டத்தினை (Reactivity Plan) சரியாக அமைத்துக் கொண்டு செயற்படுவதே சிறந்தது. பண சேகரிப்புக்கு இந்த முறை பொருந்தும் என்பதனாலே இதனைக் குறிப்பிடுகின்றேன்.

எனவே முறைமைப்படுத்தப்பட்ட திட்டங்கள் இல்லாமலே எமது பிரதேசத்தில் அனைத்து தரப்பினரும் இயங்கிய வரலாற்றுத் தவறை நீக்கி, முறைமைப்படுத்தப்பட்ட திட்டமொன்றின் மூலம் இவ்வமைப்பு பயணிக்க வேண்டும். துறைசார்ந்த பலர் இதிலுள்ளதால் இத்தவறு இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்பதே அவா