ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தை அனுமதிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 7, 2020

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தை அனுமதிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை!

மிகவும் வறிய நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் திட்டத்தை முன்னெடுக்க அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டம் சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது என்றும் அதனைத் தொடர்ந்தும் முன்னெடுக்க அனுமதிக்குமாறு திட்டத்திற்கு பொறுப்பான பல்நோக்கு அபிவிருத்திச் செயலணி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் மற்றும் செயற்பாடுகளை விளக்கி தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளர் நாயகம் நந்த மல்லவாரச்சி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருந்தாலும் வேட்பு மனு கோரப்படாதிருப்பதால் இந்த விடயத்திற்கு அனுமதியளிக்குமாறு கேட்டுள்ளார்.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பல்நோக்குச் சேவை வழங்குநர்களைக் கொண்ட தொகுதியொன்றை ஸ்தாபிப்பதற்கு 2019 டிசம்பர் 10ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்தது. அத்தொகுதிக்கு ஆட்களை ஆட்சேர்ப்பு செய்யும் விளம்பர அறிவித்தல்  இவ்வருடம் ஜனவரி 20ஆம்திகதி பிரசுரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட நேர்முகப் பரீட்சைகள் இப்போது நிறைவுபெற்றுள்ளது. பல்நோக்கு அபிவிருத்திச் செயலணி என்ற பெயரில் புதிய திணைக்களமொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனவரி 3ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்தது.

அதற்குத் தேவையான பணிக்குழாமை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைக்கு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றது. இந்த நோக்கத்திற்காக ஜனாதிபதி அலுவலகத்தினால் 1.15 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

புதிய திணைக்களத்திற்கு அரச அலுவலர்களை நியமிப்பதே தற்போது செய்யப்பட வேண்டியுள்ளதென்று செயலணியின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதேபோன்று நேர்முகப் பரீட்சைக்காக வருகை தந்தவர்களிடையே தகைமைகளைக் கொண்டுள்ள ஒரு இலட்சம் பேரை ஆட்சேர்ப்புச் செய்யவேண்டியுள்ளது.

அவ்வாறு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவது குறைந்த கல்வித் தகைமைகளையும் திறன்களையும் கொண்ட வறிய குடும்பங்களிலிருந்தாகும்.  இந்த பணித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் அதனை முன்னெடுப்பதற்கு அனுமதிக்குமாறு பணிப்பாளர் நாயகம் நந்த மல்லவராச்சி தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.