6 ஆண்டுகள் காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை இறுக்கி காதலன் படுகொலை செய்துள்ளார். பின்னர் விஷம் குடித்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கோவையை அடுத்த கீரணத்தம் அருகே உள்ள கல்லுக்குழியை சேர்ந்தவர் முருகன் மகள் நந்தினி (21). இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் இறுதியாண்டு படித்து வந்தார்
கோவை கணபதி அருகே உள்ள சங்கனூரை சேர்ந்தவர் தினேஷ் (21). இவர் வீடுகள் மற்றும் மண்டபங்களில் உள் அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார். நந்தினியும், தினேசும் சிறுவயது முதல் ஒன்றாக படித்து வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. அவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். மேலும் செல்போன் மூலமும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நந்தினியிடம் தினேஷ் வற்புறுத்தி வந்தார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து இருவீட்டாரும் சந்தித்து பேசி நந்தினியின் படிப்பு முடிந்தவுடன் திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து நந்தினியும் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தினியை சந்தித்த தினேஷ் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு நந்தினி படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் கூறி உள்ளார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.
அதன்பிறகு தினேஷ், நந்தினியை பார்க்கும் இடங்களில் எல்லாம் திருமணம் குறித்து பேசி தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் நந்தினி கடந்த 20 நாட்களாக தினேசிடம் சரியாக பேசவில்லை. மேலும் அவரை திருமணம் செய்யவும் சம்மதம் தெரிவிக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் நந்தினி மீது தினேஷ் கடும் கோபத்தில் இருந்து வந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் நந்தினியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு தினேஷ் சென்றார். அங்கு தனியாக இருந்த நந்தினியிடம் திருமணம் குறித்து தினேஷ் மீண்டும் பேசி உள்ளார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ் வீட்டில் இருந்த இருக்கைகைகளை எடுத்து நந்தினியை தாக்கினார். இதில் அவர் தலை, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பிறகும் வெறி அடங்காத தினேஷ், வீட்டில் இருந்த ஒரு துப்பட்டாவால் நந்தினியின் கழுத்தை இறுக்கினார். மேலும் தான் கொண்டு வந்திருந்த சாணி பவுடரை (விஷம்) நந்தினியின் வாயில் ஊற்றினார்.
பின்னர் அவர், அங்கிருந்து தப்பிச் சென்று குரும்பபாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் பதுங்கி இருந்தார். இந்த நிலையில் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர், நந்தினி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், நந்தினியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை நந்தினி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து மாணவியின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் திரண்டனர். அவர்கள், நந்தினியை கொன்ற தினேஷை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் காதலியை கொன்ற தினேஷ் தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் பாட்டி வீட்டில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் அவர் உயிர் பிழைத்தார். இதையடுத்து அவர் சிகிச்சை பெறும்வார்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பின்னர் அவர் கைது செய்யப்படுவார்.