சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு ஒத்திவைப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, February 24, 2020

சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு ஒத்திவைப்பு!

இறுதிப்போரில் முல்லைத்தீவு வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்க்கொணர்வு மனுமீதான விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதிப்போரில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுமீதான இரண்டாம் கட்ட வழக்கு விசாரணைகள் இன்றையதினம் (24) விசாரணைக்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பிரமுகரான எழிலன் உள்ளிட்ட 12 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் கடந்த சில வருடங்களாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுவந்த நிலையில் எழிலன் உள்ளிட்ட ஐந்துபேர் தொடர்பான ஆட்கொணர்வு வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் மிகுதியாக உள்ளவர்களின் வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் இன்றையதினம் ஆட்கொணர்வு மனு தொடர்பான சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கபட்டது.

இந்தவழக்கில் மனுதாரர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் மன்றில் முன்னிலையாகி வாதாடியிருந்தார்.

இந்த நிலையில் இன்றைய வழக்கு விசாரணைக்காக இராணுவத்தரப்பை சேர்ந்த சட்டத்தரணிகள் மன்றுக்கு வருகை தந்த நேரத்தில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதோடு நீதிமன்றை சூழவும் வழமைக்கு மாறாக ஆயுதம் தாங்கிய பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.