பிரேரணையிலிருந்து விலகுவது அரசாங்கத்தின் விருப்பம்; ஆனால் பிரேரணை தகுதியிழக்காது: இரா.சம்பந்தன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, February 22, 2020

பிரேரணையிலிருந்து விலகுவது அரசாங்கத்தின் விருப்பம்; ஆனால் பிரேரணை தகுதியிழக்காது: இரா.சம்பந்தன்!

2015ம் ஆண்டு பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது. நிறைவேற்றப்பட்ட பிரேணையிலிருந்து விலகுவது அவர்களது விருப்பம். ஆனால், நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அது பாதிக்காது. பிரேரணை அப்படியே இருக்கும். அது தகுதியை இழக்காது என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

இன்று (22) யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபோதும், அதற்கு முன்னதாகவும் சர்வதேச மனித உரிமைச் சட்டமும், மனிதாபிமான சட்டமும் மிக மோசமாக மீறப்பட்டு, பல போர்க்குற்றங்கள் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்த சில நாட்களில் ஐ.நா செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு வந்திருந்தார். யுத்தம் சம்பந்தமாக சில கருமங்களை மேற்கொள்ளவும், சிலவற்றை அறிவிக்கவுமே வந்தார்.

மஹிந்தவை சந்தித்தபோது, பொறுப்புக்கூறல் சம்பந்தமாக தாம் நடவடிக்கையெடுப்பதாக மஹிந்த வாக்குறுதியளித்து, அவர்களது கூட்டறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.

இதன்பின் அந்த நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து பான் கீ மூன் தமக்கு அறிக்கையளிக்க நிபுணர்குழுவொன்றை அமைத்தார். இலங்கை அரசும் ஒரு குழுவை நியமித்தது. செயலாளர் நாயகம் நியமித்த குழுவும் அறிக்கை சமர்ப்பித்தது.

நாங்கள் எடுத்த சில முயற்சிகள் காரணமாக, அமெரிக்க இராஜாங்க அமைச்சரை தொடர்பு கொண்டு, முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென கேட்டதற்கு அமைய, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா 20102ல் பிரேரணை சமர்ப்பித்தது. 2015ல் 30 1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொறுப்புக்கூறல் சம்பந்தமாக அந்த தீர்மானத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருந்தது. இலங்கைக்கு 2 வருட அவகாசம் கொடுக்கப்பட்டது. காலஅவகாசம் முடிந்ததும், மீண்டும் 2 வருடம் இலங்கை கேட்டது. 2017இலும், மேலும் இரண்டு வருடம் காலஅவகாசம் கேட்டு, 2019ம் ஆண்டு வரை அவகாசம் கொடுத்து, மீளவும் அவகாசம் கொடுத்து 2021ம் ஆண்டு வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

யுத்தம் நடந்தபோது ஆட்சியிலிருந்தவர்கள், 2019இல் மீண்டும் ஆட்சிக்கு திரும்பி, இன்று பிரேரணையிலிருந்து விலகுவதாக கூறியுள்ளனர்.

2015ம் ஆண்டு பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது. நிறைவேற்றப்பட்ட பிரேணையிலிருந்து விலகுவது அவர்களது விருப்பம். ஆனால், நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அது பாதிக்காது. பிரேரணை அப்படியே இருக்கும். அது தகுதியை இழக்காது என்றார்.