தொன்மையான தமிழ்மொழியை மறந்து சிங்களத்தை தனிமொழியாக ஆதரித்தவர் ரத்ன தேரர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, February 3, 2020

தொன்மையான தமிழ்மொழியை மறந்து சிங்களத்தை தனிமொழியாக ஆதரித்தவர் ரத்ன தேரர்!

இனங்களுக்கிடையில் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறும் அத்துரலிய ரத்ன தேரர், ஏன் வடக்கு கிழக்கில் 2000 ஆண்டுகளுக்கு மேல் இன்றுவரையில் தமிழ் மொழி பேசப்பட்டு வந்ததை மறந்து சிங்கள மொழியே நாடெங்கிலும் தனிமொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரித்து வந்தார் என சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதனால் பிளவு ஏற்படும் என்று அவர் கருதவில்லையா என்றும் இப்போதும் வட கிழக்கு மாகாண சபைகளுக்கு சிங்களத்தில் மட்டும் கடிதங்கள் மத்திய அரசினால் அனுப்பப்பட்டு வருகின்றனவே அதைப் பிளவை ஏற்படுத்தும் செயல் என்று அவர் ஏன் கூறவில்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்த சி.வி.விக்னேஸ்வரன் முயற்சிப்பதாக அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்த கருத்து தொடர்பாக வாரம் ஒரு கேள்விக்கான பதிலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அந்த குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஒரு சாதாரண சிங்களக் குடிமகன் இவ்வாறு கூறியிருந்தால் நான் அதைப் பற்றி அலட்டிக் கொண்டிருக்கமாட்டேன். ஆனால் வணக்கத்திற்குரிய ரத்னதேரர் சில காலத்திற்கு முன்னர் என்னை வந்து சந்தித்துச் சென்றவர். இப்பொழுதும் என்னுடன் நல்லுறவைக் கொண்டிருப்பவர்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும். பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். வறுமையில் உள்ள மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். நாம் சமமானவர்கள் என்பது போன்ற அவரின் கருத்துக்களை நான் வரவேற்கின்றேன்.

அனைவருக்குள்ளும் ஓடும் இரத்தம் ஒன்றுதான் என்று வைத்தியர்கள் கூறுகின்றார்கள். அதை எவரும் மறுக்கவில்லை. ஆனால் நான் இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்த முயல்கின்றேன் என்பதை என்ன அடிப்படையில் அவர் கூறினார் என்பது எனக்குத் தெரியவில்லை.

நான் உண்மைகளை வெளியிட்டதால் இனப் பிளவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அவர் கருதியிருந்தால் அதை நான் மறுக்கின்றேன். பொய்களைக் கூறி முழு சிங்கள மக்களையும் பிழையாக வழிநடத்திய ஒரு நாட்டில் நான் உண்மை இதுதான் என்றால் அதற்குப் பொறுப்பு நானா அல்லது பிழைகளை இதுவரை காலமும் வெளிப்படுத்திய வணக்கத்திற்குரிய தேரர் போன்றவர்களா?

நான் பிளவை ஏற்படுத்தப் பார்க்கின்றேன் என்று அவர் கூறும் போது எனது உண்மைக் கூற்றுக்களை மறுக்க முடியாததால்த் தான் அவர் அவ்வாறு கூறுகின்றரோ என்று நான் நினைக்க வேண்டியுள்ளது.

இதுவரை காலமும் நாட்டை சிங்கள பௌத்த நாடு என்று கூறி அதை உறுதிப்படுத்த உழைத்த பலர் இன்று நான் கூறும் உண்மைகளை அடியோடு வெறுப்பதை நான் உணர்கின்றேன். ஒன்றில் நான் கூறும் உண்மைகளை அவர்கள் ஏற்க வேண்டும், அப்போது பிளவு ஏற்படாது.

அல்லது நான் கூறுவன உண்மைக்குப் புறம்பானவை என்பதை நிரூபிக்க வேண்டும். அப்போதும் பிளவு ஏற்படாது. எனக்குத் தலைக்குனிவு மட்டுந்தான் அப்போது ஏற்படும்.

நான் என்ன கூறிவிட்டேன் பிளவை ஏற்படுத்த? இவ்வாறு பலவற்றை நான் உண்மையெனக் கண்டு கூறுகின்றேனே ஒளிய மக்களுக்குள் பிளவு ஏற்படுத்த நான் முனையவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் பிறந்து, படித்து, வாழ்ந்து வந்தவன் நான்.

என் அன்புமிக்க மருமகள்மார்கள் சிங்களவர்கள். சிங்கள மக்கள் மீது எனக்குப் பகையோ வெறுப்போ இல்லை. ஆனால் பொய்மையில் இலங்கை உழல்வதைக் காணப் பொறுக்க முடியாது இருக்கின்றது.

நான் உண்மையைக் கூறி வருகின்றேன். நான் கூறும் உண்மைகளில் பலவற்றை பேராசிரியர் இந்திரபால 2005 ல் எழுதிய நூலில் காணலாம். நான் கட்டுக் கதைகளை வெளிக்கொண்டு வரவில்லை.

இனத்துவேஷம் மிக்கவர்களே இதுகாறும் பொய்களையும் புனைகதைகளையும் உண்மையென சிங்கள மக்களை நம்ப வைத்துள்ளார்கள். ஆகவே பிளவு ஏற்படப் போகின்றதென்றால் புனைகதைகளை முதலில் அரங்கேற்றியவர்களே அதற்குக் காரணம். நான் அல்ல” என கூறினார்.