இன அழிப்பின் ஒரு அங்கமாகமே உலகத் தமிழராட்சி மாநாட்டில் நடந்த கொலைச் சம்பவம் என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
உலகத்தமிழராட்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 46 ஆவது ஆண்டு நிகழ்வு இன்று முற்ற வெளியிலுள்ள தமிழராட்சி நினைவுத்தூபியில் நடந்தது. அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழினப் படுகொலையின் ஒரு அங்கமாகத்தான் உலகத்தமிழராட்சி மாநாட்டின் கொலைச் சம்பவத்தைப் பார்க்கமுடியும் இந்தப் படுகொலைச் சம்பவத்தை நாங்கள் வருடம் தோறும் நாங்கள் நினைவு கூறவேண்டும்.
அமரர் அமிர்தலிங்கம் காலத்தில் இந்தத் தூபிகள் அமைக்கப்பட்டபோது மறுநாள் அதை இடித்தார்கள். அடுத்த வருடம் மீண்டும் அதே இடத்தில் நினைவுத்தூபிகள் அமைக்கப்பட்டன.
இது போல பல தடவைகள் இத்தூபி தேசமாக்கப்பட்ட நிலையில் மீளவும் புனரமைக்கப்பட்டது. தமிழ் மக்களின் இன விடுதலைக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டபோது பல தடவைகளாக தடுத்து நிறுத்தப்பட்டது.
எனினும் தமிழர்கள் விடுதலை அடையும் வரை விழ விழ நாங்கள் மீண்டெழுவோம் எமக்கான விடுதலை கிடைக்கும் வரையும் எங்கள் மீது அனைத்து கொலைகள் கொலைமுயற்சிகள் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டிலும் அவற்றை நினைவு கூறவேண்டும்.
எங்களை நாங்களே ஆளக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை உயிரிழந்த அனைவருக்காவும் நாங்கள் நினைவுகூரவேண்டும், எங்கள் விடுதலைக்காக உயிர்நீத்த அனைவருக்கும் அஞ்சலி செய்து எங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை அந்தப் போராட்டம் தொடரவேண்டும் என்பதே எமது எண்ணம் இதை உலக நாடுகளும் உணரவேண்டும் என்றார்.