வரலாற்றைத் திரிபுபடுத்தி, நாட்டில் ஐக்கியத்தையும் பௌத்தத்தையும் இல்லாதொழிக்க அரச சார்பற்ற நிறுவனங்கள் தீவிரமாக செயற்பட்டு வருவதாக இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும். இதற்கான வேலைத்திட்டங்கள் பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளை நாம் அவதானித்துக் கொண்டுதான் வந்தோம்.
பௌத்தர்களைக் கொண்டே பௌத்தத்திற்கு எதிராக செயற்பட்டார்கள். சிங்களவர்களின் உரிமை எதிர்க்கப்பட்டது. இது ஒரு கட்டத்தில் வாடிக்கையான ஒரு விடயமாகவே மாற்றமடைந்தது.
சிங்களவர்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள், தேரர்கள் என அனைவரும் அவமரியாதைக்குட்படுத்தப்பட்டார்கள்.
இது இலங்கை வரலாற்றிலேயே முதன் முறையாகும். அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லும் வீதம் வீழ்ச்சியடைந்தது.
இதனை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டுவரும் செயற்றிட்டங்களை நாம் கொண்டுவருவோம். அரச சார்பற்ற நிறுவனங்களினாலேயே இந்தப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதுதான் உண்மை. இவர்களால் வரலாறுகள்கூட திரிபுப்படுத்தப்படுகின்றன.
அரசாங்கத்தால் வெளியிடப்படும் புத்தகங்களில்கூட, வடக்கும் கிழக்கும் ஒரே மாகாணம் என்ற வகையில் காண்பிக்கப்பட்டுள்ளன.
இதனால், இவர்கள் கூற வருவதுதான் என்ன? இதனால், எவ்வாறான தாக்கம் ஏற்படும் என்பதை யாரும் சிந்திக்கவில்லை.
இந்த நாட்டை பிரிக்க, சிங்கள- பௌர்தர்களை இல்லாதொழிக்க, ஐக்கியத்தை இல்லாதொழிக்கவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதற்காக, பாடசாலையிலிருந்தே நாசகார செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாடசாலையில் இவ்வாறான செயற்பாடுகளை ஆரம்பித்தால், இன்னும் சில ஆண்டுகளிலேயே, இந்தநிலைமை நாட்டில் ஏற்பட்டுவிடும்.
இதற்கு நாம் என்றும் இடமளிக்கக்கூடாது. இதற்காக நாம் அனைவரும் பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.