நாங்கள் தயார்:சிங்கள மக்கள் தயாரா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, December 24, 2019

நாங்கள் தயார்:சிங்கள மக்கள் தயாரா?



ஒரே நாடு என்ற ரீதியில் ஒன்றாக செயற்பட தமிழ் மக்கள் தயாராக இருந்தாலும் சிங்களவர்கள் அதற்கு தயாராக இல்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களது பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இணைந்து செயற்படுவதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் பின்நிற்கவில்லை, ஆனால் பெரும்பான்மையினரே எம்மை இணைத்துக் கொள்வதற்கோ அல்லது எமக்குரிய அங்கீகாரங்களை வழங்குவதற்கோ முன்வருகின்றார்கள் இல்லை என்பதை எமது தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும்போது தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு நாம் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
எமது அரச தலைவர்கள் கூறுவது போல சிங்கள மக்கள் விரும்புகின்றார்கள் இல்லை என்ற கூற்று மிகத் தவறானது என தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன் படித்த பல சிங்கள சிவில் தலைவர்கள் சமஷ்டியை விரும்புகின்றார்கள் என கூறினார்.

அரசியல் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்ற தமிழ் மக்களே ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை மிகுந்த அபிலாஷயுடன் எதிர்நோக்குகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டைத் துண்டு போடுவதோ அல்லது பிளவுபடச் செய்வதோ எமது நோக்கமல்ல என கூறிய சி.வி.விக்னேஸ்வரன் மாறாக தமிழ் மக்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகள் என்ற கௌரவத்துடன் வாழக்கூடிய ஒரு நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.