க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை தோற்றிய மாணவர்களில் 71 பேருடைய பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இடைநிறுத்தப்பட்டவர்களில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றிய 42 மாணவர்களும், பழைய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றிய 29 மாணவர்களும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2019 ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை நாடு முழுவதிலுமுள்ள 315 இணைப்பு மத்திய நிலையங்களின் ஊடாக 2,278 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சைகள் இடம்பெற்றன. இதில் உயர்தர பரீட்சைக்கு 337,704 மாணவர்கள் பரீட்சை எழுத தகுதி பெற்றிருந்தனர் எனவும் சனத் பூஜித கூறியுள்ளார்.
இருப்பினும் 281,786 பேரே மூன்று பாடங்களுக்கும் தோற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.