கோட்டாபயவினால் கடத்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதன்முதலாக கடத்தப்பட்டு காணாமல் போன இன்பம், செல்வம் விவகாரங்களில் இருந்து விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் கோட்டாபயவின் வடக்கு பிரச்சார இணைப்பாளர் சி.தவராசா.
கோட்டாபயவின் வெள்ளைவான் கடத்தல் விவகாரங்களில் சில பகுதிகளில் அம்பலமானதையடுத்து, இன்று யாழில் பொதுஜன பெரமுனவின் ஆதரவு தரப்புக்கள் அவசரமாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தனர்.
ரெஜினோல்ட் குரே, அங்கஜன் இராமநாதன், சி.தவராசா, பெரமுனவின் யாழ் அமைப்பாளர் ரஜீவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய அங்கஜன்,
கோட்டாபயவின் வெற்றி உறுதியாகி விட்டதால் சேறுபூசும் வேலைகள் நடக்கிறது. அமைச்சர் ராஜித சேனாரத்ன வெள்ளை வான் ஓடுபவர், கடத்தப்பட்டவர் என இருவரை அழைத்து வந்து, கோட்டாபயவின் மீது குற்றச்சாட்டு சுமத்தினார்.
இது பொய்யானது என சிங்கள மக்கள் விளங்கிக் கொண்டுள்ளனர். ஊடகவியலாளர் சந்திப்பிற்கு வந்த அவர்கள் தாடியை ஒட்டிக்கொண்டு மாறுவேடத்தில்தான் வந்துள்ளனர்.
330 பேரின் உடலும் சுறாவிற்கு போடப்பட்டதாக ராஜித சொன்னார்.பின்னர் மற்றவர் முதலைக்கு போடப்பட்டதாக சொன்னார். குளத்தை அடையாளப்படுத்தலாமா என ஊடகவியலாளர் கேட்டதற்கு, இடத்தை அடையாளம் காண முடியவில்லையென்றார்.
வாகன ஓட்டனர் 300 பேர் காணாமல் போய் கொல்லப்பட்டிருந்ததில் உடந்தையாக இருந்திருந்தார் ராஜித சேனாரத்ன அதற்கு நடவடிக்கையெடுத்திருக்க வேண்டும்.
நாள் 2010இல்தான் அரசியலுக்கு வந்தேன். அதற்கு பின்னர் இப்படியான விடயங்கள் வெளியில் வரவில்லை. அதற்கு முன்னர் நடந்திருக்கலாம், நடக்காமிலிருந்திருக்கலாம். இதெல்லாம் நடந்தது என்று சொல்லி, தண்டனை வழங்குவோம் என சொல்லித்தான் இந்த நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்தது. இவர்கள் அதை விசாரித்து நடவடிக்கையெடுத்திருக்க வேண்டும். சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அரசியல்ரீதியான குற்றச்சாட்டுக்கள்தான் சுமத்தப்பட்டன. குற்றம் செய்திருந்தார்கள் என்றால், அதை நிரூபித்திருக்க வேண்டியது எமது தமிழ் தலைமைகளும், நல்லாட்சி அரசும்தான். உண்மையில் சட்டரீதியான நடவடிக்கையெடுத்து தமிழ் மக்களிற்கு அநியாயம் செய்தவர்களிற்கு தண்டனை கொடுத்திருக்க வேண்டும். அதைவிட்டு, இதை ஒரு தேர்தல் யுக்தியாக பாவித்து, மீண்டும் ஆட்சிக்கு வரும் தேர்தல் உத்தியாகத்தான் பாவிக்கிறார்கள். உண்மையில் தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை.
உண்மையில் உடனடியாக இதற்கு சட்டரீதியான நடவடிக்கையெடுத்திருக்க வேண்டும். அந்த ஊடக சந்திப்பு முடிய, தனது வாகனத்திலேயே அவர்களை அமைச்சர் அழைத்துசெல்கிறார். 300 பேரை கொன்றதாக சொல்லும் ஒருவரை நான் பக்கத்தில் வைத்திருக்கலாமா? அவரை பொலிசில் அல்லவா கொடுத்திருக்க வேண்டும்.
இதே மாதிரி இரண்டு நாளின் முன்னர் முன்னாள் இராணுவ அதிகாரியை அழைத்து வந்து பொய் சொன்னார்கள். பின்னர் அவர் சமூக ஊடகங்களிடம் சொன்னார், ராஜித வீடு, வசதி செய்து தருவேன் என்று சொன்னதால் அப்படி சொன்னதாக. இதை ஊடகச்சந்திப்பில் ராஜிதவிடம் கேட்டபோது, பொய்யாகவும் இருக்கலாம் என்றார்.
இந்த விடயம் பொய்யானது என சிங்கள மக்கள் விளங்கியிருக்கிறார்கள். கோட்டாவிற்கு சிறுபான்மையின மக்களின் வாக்குகளை செல்லாமல் தவிர்க்கவே இந்த சேறு பூசலை மேற்கொள்கிறார்கள்.
வடமாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், கோட்டாபயவின் வடக்கு தேர்தல் பிரச்சார இணை இணைப்பாளருமான சி.தவராசா கருத்து தெரிவித்தபோது-
2015ம் ஆண்டு தேர்தலிலும் இப்படித்தான் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தினார்கள். கோட்டாபயவை 6 மாதத்தில் மறியலுக்கு அனுப்புவேன் என ராஜித சொன்னார். பிறகு சொன்னார் 1 வருடத்தில் அனுப்புவேன் என. பின்னர் ஒன்றரை வருடத்தில் அனுப்புவேன் என்றார். 5 வருடத்தில் எதுவும் நடக்கவில்லை.
இப்பொழுது ஒருவரை கொண்டு வந்து வெள்ளை வான் ஓடினார் என்றால், அதற்கு எப்பொழுதோ நடவடிக்கையெடுத்திருக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரம் முடியும் நேரத்தில் அவரை பத்திரிகையாளர் மத்தியில் கொண்டு வந்திருக்க தேவையில்லை. பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை.
நான் சிங்கள பக்கத்தில் பல இடங்களில் செக் பண்ணி பார்த்தேன். சிங்கள மக்களிடம் இது எடுபடவில்லை.
அண்மையில் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த பிக்குவின் உடலை எரித்த விடயத்தில், பிக்குகளை ரணில் கண்டித்ததாகவும், தமிழ் மக்களிற்கு கோட்டா பாதகமாக கதைத்ததாகவும் உதயனில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் அது பொய்ச்செய்தி. அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்றார்.
இதன்போது, காணாமல் போனவர்கள் பற்றிய சம்பவம் நடக்கவேயில்லையா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது,
காணாமல் போனவர்கள் விடயம் நியாயமான விவகாரம். அது பற்றி விசாரித்து புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதாக கோட்டாபய தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்ல, இன்பம், செல்வம் காலத்தில் நடந்ததிலிருந்து நாங்கள் பார்க்க வேண்டும். இன்பத்துடன் 3 பேர் காணாமல் போய், நாங்கள் சடலமாக மீட்டிருந்தோம் என்றார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளிகளான இன்பம், செல்வம் ஆகியோர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் உறவினரான பிரிகேடியர் வீரதுங்கவின் காலத்தில் கைதாகி, காணாமல் போயிருந்தது குறிப்பிடத்தக்கது.