ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை அனைவரும் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்த வேண்டும் எனவும் எவரும் தேர்தலை புறக்கணிக்கக்கூடாது என்றும் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் தெரிவிக்கையில், “தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையாகும். அந்தக் கடமையையும் பொறுப்பையும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.
வாக்களிப்பது என்பது நமது புனிதமான கடமையாகும். வாக்களிக்கும் உரிமையை அனைவரும் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்த வேண்டும்.
தேர்தல் தினத்தன்று வாக்குரிமை பெற்ற அனைவரும் மாலைநேரம் வரை காலம் தாழ்த்தாது நேரகாலத்துடன் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று உங்கள் வாக்குகளை பயனுள்ளதாக்க வேண்டும்” என்றார்.