13 அம்சக் கோரிக்கைகளை நிராகரித்த இருவரும் தமிழர்களிடம் எவ்வாறு வாக்களிக்க கோருவார்கள்? சிவசக்தி ஆனந்தன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, November 7, 2019

13 அம்சக் கோரிக்கைகளை நிராகரித்த இருவரும் தமிழர்களிடம் எவ்வாறு வாக்களிக்க கோருவார்கள்? சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்களின் 13 அம்சத் கோரிக்கைகளை நிராகரித்த பிரதான இரண்டு வேட்பாளர்களும் எந்த அடிப்படையில் தமிழ் மக்களிடம் தங்களுக்கு வாக்களிக்க கோருவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ் கட்சிகள் முன்வைத்த 13 கோரிக்கைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ” வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் , மதத் தலைவர்கள், சுயாதீன அமைப்புகள் இணைந்து ஐந்து தமிழ் கட்சிகளினால் கொண்டு வரப்பட்ட 13 அம்ச கோரிக்கையானது, கடந்த 70 வருட காலம் தீர்க்கப்படாதிருக்கும் முக்கியமான கோரிக்கைகளாகும்.

அவற்றில் அரசியல் தீர்வு தவிர்த்து ஏனையவை யுத்தத்திற்கு பின்னரான நிலைமைகளாகவே உள்ளன. அதாவது அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்குதல், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு ஆகியன காணப்படுகின்றன.

இவை தனி நாட்டுக்கான கோரிக்கையல்ல. தமிழ் மக்களின் மீதான இன படுகொலை காரணமாக தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையிலேயே 13 அம்ச கோரிக்கைகளை வேட்பாளர்களுக்கு கையளிக்க நடவடிக்கையெடுத்தோம்.

ஆனால் பொதுஜன பெரமுன வேட்பாளர் வெளிப்படையாகவே இந்த கோரிக்கைகள் தொடர்பாக எங்களை சந்திக்க தயார் இல்லையென கூறிவிட்டார். இதேவேளை சஜித் பிரேமதாசவும் யாருடைய  நிபந்தனைகளுக்கும் கட்டுப்படப்போவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நிலைமையில் தமிழ் மக்கள் உங்களுக்கு என்ன அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்பது தமிழ் மக்களிடம் இருக்கும் கேள்விகளாக உள்ளது” என அவர் கூறினார்.