கோத்தபாயவின் உத்தரவின் பேரில்வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகளை படுகொலை செய்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்ட பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர், மெகசின் சிறைச்சாலையின் அதிகாரி ஆகியோருக்கு எதிரான வழக்கை, ஒக்டோபர் 14ஆம் திகதியிலிருந்து விசாரணை செய்வதற்கு விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய குழாம், நேற்று (10) தீர்மானித்தது.
14ஆம் திகதிக்குப் பின்னர் புதன்கிழமை, வௌ்ளிக்கிழமைகளில் இந்த வழக்கை விசாரணை செய்யத் தீர்மானித்த நீதிபதிகள் குழாம் அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, முறைப்பாட்டின் சாட்சியாளர்கள் நால்வருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கானது, மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க (தலைவர்) பிரதீப் ஹெட்டியாராச்சி, மஞ்சுள திலகரத்ன ஆகியோரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் தப்புல டீ லிவேராவின் கோரிக்கைக்கு அமைய, நீதியரசர் ஜயந்த ஜயசூரியவால் இந்த வழக்கை விசாரிப்பதற்காக மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளை கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.