தமிழகத்தில் மாமியாரும், மருமகளும் ஒரே நேரத்தில் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மேலஉசேன் நகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (73). விவசாயி. இவரது வீட்டின் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் அல்லிநகரம் ஊராட்சியின் ஆழ்குழாய் கிணறு உள்ளது.
இவர் வீட்டுக்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் அறை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஆழ்குழாய் கிணறு பழுதடைந்ததால் அதனருகே புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் அல்லிநகரம் ஊராட்சி ஊழியர்கள் மின்மோட்டார் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் ராமதாஸ், அவரது மனைவி பூங்கொடி (56), அவர்களது மருமகள்கள் தமயந்தி, தங்கலட்சுமி (33) ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் மின்மோட்டார் பொருத்தும் பணி நடந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த தங்கலட்சுமி, பூங்கொடி ஆகியோர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தனர். உடல் முழுவதும் தீ பரவியதால் இருவரும் வலியால் அலறினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர்கள் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நேற்று அதிகாலை பூங்கொடி சிகிச்சை பலனின்றி இறந்தார். தங்கலட்சுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 12 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.