வடமராட்சி – துன்னாலை குடவத்தை பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றின் அவலநிலை தொடர்பாக அரச அதிகாரிகள் எவரும் அக்கறை செலுத்தவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பம் ஒன்று தறப்பாள் குடிசைக்குள் வசித்து வருகின்றது. தற்போது மழை தொடங்கியுள்ளதால் அந்தக் குடும்பத்தின் குடிசைக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது.
ஏழைக் குடும்பங்களை எட்டிப் பார்க்காத அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...
மக்கள் வசிப்பதற்கே முடியாத அந்த தறப்பாள் குடிசைக்குள் ஏழைக் குடும்பம் ஒன்று வசித்து வருகின்றது. அப்பகுதியில் உள்ள பிரதேச செயலர், கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் இந்தக் குடும்பத்தை அவதானிக்கவில்லையா என மக்கள் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறான பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஏதொவொரு காரணத்திற்காக வீட்டுத்திட்டங்கள் மற்றும் உதவித் திட்டங்களில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ்;ப்பாணக் குடாநாட்டில் பல பிரதேசங்களில் அரசியல் செல்வாக்குடன் அரச உத்தியோகத்தர்களுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர்.
இந்திய வீட்டுத்திட்டம், மீள்குடியேற்ற அமைச்சின் வீட்டுத்திட்டம், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத்திட்டம் போன்றவற்றில் ஏதாவது ஒரு திட்டத்திற்குள் இவ்வாறான குடும்பங்களை உள்வாங்கிருக்க முடியும் எனவும் இது அரச அதிகாரிகளின் தவறு அன்றி வேறு எதுவும் இல்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.