தேர்தல் காலத்தில் ஊடகங்கள் இடையூறு ஏற்படுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை – தேர்தல்கள் ஆணைக்குழு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, September 27, 2019

தேர்தல் காலத்தில் ஊடகங்கள் இடையூறு ஏற்படுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை – தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஊடகங்களால் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமாயின் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் மூலோபாய மற்றும் சர்வதேச தொடர்பு கல்வி நிறுவனத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து வௌியிட்ட போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு சட்ட ரீதியான இடையூறுகள் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சட்டத்தை அமுலாக்குவதற்கான சிக்கல்கள் மற்றும் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான பிரச்சினைகள் ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு பெரும் தடையாக மாறியுள்ளதாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான கொள்கைகள் பிரச்சினையை தீர்க்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் போது தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட ஊடகங்களால் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமாயின் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊடகங்களினால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களினால் சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலை நடத்துவதற்கு தடை ஏற்படுமாயின் அதற்கு பொறுப்பான அலைவரிசைக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தனியார் அலைவரிசைகளுக்கு பணம் செலுத்தி தேர்தலுக்கு அழுத்தத்தை மேற்கொள்ளக்கூடிய கூற்றுக்கள் அல்லது கருத்துக்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றும்” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.