இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய தமிழ் மக்கள் பேரவையை இருகூறாகப் பிளவுபடுத்தித் தான் நடாத்திய போட்டி எழுக தமிழ்ப் பேரணி தோல்வியடைந்தமைக்கும், தனக்கான மக்கள் ஆதரவில் சரிவு ஏற்பட்டமைக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் விசுவாசிகளே காரணம் என்று சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈழத்தமிழர்கள் ஒரு தேசம் என்பதை அடியோடு நிராகரித்து, இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய சிறுபான்மை மக்கள் என்ற வரையறைக்குள் ஈழத்தமிழினத்தைச் சிறுமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் விக்னேஸ்வரன் ஈடுபடுவது தமிழீழ மக்கள் மத்தியில் அம்பலமாகிய நிலையில், அவரால் நேற்று 16.09.2019 திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டி எழுக தமிழ் பேரணியில் பங்கேற்பதை பெரும்பாலான தமிழீழ மக்கள் தவிர்த்தனர்.
இதனால் விக்னேஸ்வரனின் போட்டி எழுக தமிழ் பேரணி பிசுபிசுத்துப் போன நிலையில் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும் விக்னேஸ்வரன், இது பற்றி திங்கள் மாலை தன்னை சந்தித்த மருத்துவர் ஒருவரிடம் தெரிவிக்கையில்:
இன்று எழுக தமிழ் தோல்வியில் முடிந்ததற்கு பிரபாகரனின் வால்பிடிகள் தான் காரணம். பிரபாகரன் ஆணவத்தோடு இருந்தார் என்று ஒரு தடவை நான் மேடையில் கூறியதை பெரிதுபடுத்தி எனக்கு எதிரான பிரசாரங்களை வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் உள்ள புலிவால்கள் செய்திருக்கிறார்கள். திட்டமிட்டு எனக்கு எதிராக இந்த வால்பிடிகள் பிரசாரம் செய்துள்ளார்கள்.’
இவ்வாறு தமிழீழ தேசியத் தலைவரையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் நிந்தித்து விக்னேஸ்வரன் கருத்துக் கூறியிருந்தாலும், தனது பேரணிக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பியக் கிளை ஒன்றிடம் அவர் நிதியுதவி கோரியிருந்தார். அத்துடன் விக்னேஸ்வரனுக்குப் பக்கபலமாக பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களைக் கையகப்படுத்தியிருக்கும் ஐந்து பேர் செயற்பட்டனர்.
இவர்களில் மூன்று பேர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் முன்னாள் போராளிகளாவர். நான்காவது நபர் பிரித்தானிய தமிழர் பேரவையில் இருந்து பிரிந்து சென்று தனியாக இயங்கும் முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் ஆவார். இவரது வசம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன. மற்றையவர் அவரது சகோதரர் ஆவார்.
குறித்த ஐந்து பேரில் முன்னாள் போராளியான ஒருவர் தமிழ் இணையத்தளம் ஒன்றை இயக்கி வருவதோடு, விக்னேஸ்வரனுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணையத் தவறினால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக அவதூறான பரப்புரைகளை முன்னெடுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும் விக்னேஸ்வரன் அவர்கள் மண்கவ்வியிருப்பதோடு, அதற்காகத் தமிழீழத் தேசியத் தலைவரை நேசிக்கும் செயற்பாட்டாளர்களை திட்டித் தீர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது,