தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, எமது நிபந்தனைகளை அங்கீகரித்து அதற்கு உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பு பிரதிநிதிகளுடன் இன்று ஆர்.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் எமக்கு பிரச்சினையில்லை. கட்சியின் தரப்பில் களமிறங்கும் வேட்பாளர் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வினை வழங்கப் போகின்றார் என்பதே எமக்கு முக்கியம்.
அத்துடன் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுகொள்ளும், எமது நிபந்தனைகளை அங்கீகரித்து அதற்கு உத்தரவாதம் வழங்கும் நபராக இருந்தால் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தும் நபருடன் நாம் பேசி அவரை ஆதரிப்பது குறித்து தீர்மானம் எடுப்போம்” என்று சஜித் தரப்பிடம் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை களமிறக்கும் நோக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பு அணியினர் தமக்கான ஆதரவை திரட்டும் வகையில் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிங்கள கட்சிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கட்சியின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்து தமக்கான ஆதரவை கோரியுள்ளனர். இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நாளை மறுதினம் காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதில் உறுப்பினர்களின் நிலைப்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பிற்பகல் 3 மணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.