ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், கூட்டத்தில் பங்கேற்குமாறு செயற்குழு உறுப்பினர்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.தே.க. தலைமையில் எதிர்வரும் 5ஆம் திகதி புதிய அரசியல் கூட்டணி உதயமாகவுள்ளது. கூட்டணியின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இனறைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
மேலும் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாகவும் இன்று கலந்துரையாடப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன