முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு வந்த எங்களை கும்பிட விடாமல் தடுக்கும் செயற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டனர் என நீராவியடிப் பிள்ளையார் ஆலய உப தலைவர் முத்தையா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று காலை நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,
தவழும் வயதிலேயே இந்த ஆலயத்திற்கு வந்து கொண்டிருக்கின்றோம். இன்று நாங்கள் வழிபாட்டிற்கு வந்த இடத்திலேயே பொலிஸார் பெயர் கேட்டு எழுதியமை எம்மை கும்பிட விடாமல் தடுப்பது போல் இருந்தது.
எங்களுக்கு அது பெரும் கவலையாக இருக்கின்றது. எங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற ஐயப்பாடாக உள்ளது.
பல தடவை நீதிமன்றில் வழக்காடி தான் இன்று வழிபாட்டில் ஈடுபட வந்தோம். ஆனால் இப்போது எங்களுக்கு இலங்கை பொலிஸார் தடைகளை மேற்கொள்கின்றனர். இதை குறித்து நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.