அரச அதிகாரிகள் எவருக்காவது நாடாளுமன்றம் அழைப்பு விடுத்தால் அந்த அதிகாரிகள் நாடாளுமன்றத்தின் முன்னிலையில் ஆஜராக கடமைப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.
நேற்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே சபாநாயகர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான 05 வழங்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டுவரும் பின்னணியில் தெரிவுக்குழுவொன்றினை நியமித்து விசாரணை செய்தல் உயர் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு சட்டமா அதிபர் தனக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும், ஜனாதிபதி என்ற வகையில் தான் அதனை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஒருவரினால் சமர்ப்பிக்கப்படும் அத்தகைய கடித ஆவணங்கள் நாடாளுமன்ற அமர்வின் தொடக்கத்திலேயே சம்பிரதாயபூர்வமாக சபாநாயகரினால் முன்வைக்கப்படுகின்ற போதிலும் சபாநாயகர் இவ்விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் எதுவித கருத்துக்களையும் வெளியிடாமை தொடர்பில் தான் வருத்தமடைவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் கடிதத்தை சபைக்கு அவசியம் என கருதும் பட்சத்திலேயே அந்த கடிதம் சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.