காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உடனடி விசாரணை: வலியுறுத்தியுள்ளது பாதுகாப்பு சபை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 13, 2019

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உடனடி விசாரணை: வலியுறுத்தியுள்ளது பாதுகாப்பு சபை!


ஆயுத வன்முறைகள் நிலவிய காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை கண்டறிவதுடன் எவ்விதமான காலதாமதமும் இன்றி குற்றவாளிகளுக்கான தண்டனையை உறுதிப்படுத்தவும் வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் யுத்த சூழ்நிலையில் காணாமற்போனவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்மந்தமான விடயங்களை கையாளுவதற்கான தீர்மானம் ஒன்றை முதன்முறையாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை நேற்று(செவ்வாய் கிழமை) நிறைவேற்றியுள்ளது.

குறித்த தீர்மானத்தில் சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை மேற்குறிப்பிட்ட வலியுறுத்தலை வழங்கியுள்ளது.

குறித்த தீர்மானம் தொடர்பிலான விவாதத்தில் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயங்களும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களை கையாளும் காரியாலயத்தினை சேர்ந்த றேனா ஹிலானி அம்மையார், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை கடந்த 10 வருடங்களாக தொடர்கின்ற  போதிலும் காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும்  வினைத்திறனான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.

சர்வதேச ரீதியில் யுத்தத்தில் ஈடுபடுகின்ற அனைத்து தரப்பும், காணாமல்போகின்றவர்களை முறையாக தேடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், அவர்கள் தொடர்பான சரியான விபரங்களை வேறுபாடுகள் இன்றி வைத்திருக்கவும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

மனிதர்கள் காணாமல்போவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பதுடன், குறிப்பாக சிறார்கள் காணாமல்போகின்ற நிலைமை குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் வடக்கு – கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு புதிய பரிமாணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மனிதாபிமான சட்டத்தரணி ஒருவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.