அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களினதும் பதவி விலகல் கடிதங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்னமும் அனுப்பி வைக்கப்படவில்லை என்று, தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து எழுந்த அச்சமான சூழ்நிலையை அடுத்து, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களான கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம், ஹலீம், றிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான, ஹரீஸ், அமீர் அலி, அலி சாஹிர் மௌலானா, பைசல் காசிம், மற்றும் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் கூட்டாக பதவி விலகுவதாக அறிவித்தனர்.
எனினும், அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பாக நேற்று வரை எந்த ஆவணமும், அதிபர் செயலகத்துக்கு கிடைக்கவில்லை என்று அதிபர் செயலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் பதவி விலகல் கடிதங்களை இன்னமும் சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பிக்கவில்லை என, ஜனாதிபதியின் செயலர் உதய செனிவிரத்னவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமைச்சர்கள் பதவி விலகுவதாயின் அதற்கான கடிதங்களை சிறிலங்கா அதிபரிடமே கையளிக்க வேண்டும் என்றும், அதனை அதிபர் ஏற்றுக் கொண்டால், அதுபற்றிய அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.