கன்னியாவில் பிள்ளையார் ஆலயம்:மனோகணேசன் அறிவிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, June 10, 2019

கன்னியாவில் பிள்ளையார் ஆலயம்:மனோகணேசன் அறிவிப்பு!

கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்ட மாட்டோம் எனவும், தமிழ் பௌத்த வரலாறு இருப்பதையும் ஏற்றுக்கொள்கிறோம் எனவும் அங்கு ஆக்கிரமித்து நிலைக்கொண்டுள்ள விகாரைகளது தேரர்கள் உடன்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புராதன சிதைவுகளுக்கு சேதம் ஏற்படாத முறையில் கன்னியா வளவுக்குள் வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைக்கவும், வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தையும் புனரமைக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கன்னியா வெந்நீருற்று பகுதியை ஆக்கிரமித்து பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் இன்று திருகோணமலைக்கு பயணம் செய்த இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு,இந்து சமய அலுவல்கள் அமைச்சர்; மனோ கணேசன் ஆராய்ந்திருந்தார்.

தொடர் கலந்துரையாடலை கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், இந்து, பௌத்த விவகார அமைச்சர்கள் கலந்துக்கொள்ளும் மட்டத்தில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கன்னியா விநாயகர், சிவன் ஆலய கட்டுமானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை தனது அமைச்சு வழங்குமெனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலில் பின்னர் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் , சிவன்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜையிலும் கலந்துகொண்டனர். அவ்விடத்தில் ஆக்கிரமித்து அமைந்துள்ள பௌத்த விகாரைக்கும் அமைச்சர் மனோ கணேசன் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.