பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வதற்கான, அமைச்சரவைப் பத்திரம் ஒன்று விரைவில் சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அரசியல் கைதிகளுக்கு ஆறு மாதங்கள் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கோரப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தற்போது இந்த அமைச்சரவைப் பத்திரத்தை வரையும் பணிகள் நடந்து வருவதாகவும், அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அல்லது ஆறு மாத காலத்திற்கு அவர்களை புனர்வாழ்வு அளித்து விடுவிக்குமாறு முன்மொழியவுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அமைச்சரவையில் இந்தப் பத்திரம், சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதுகுறித்து விவாதித்து, சிறந்த வழியை தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
மிகவும் உணர்வுபூர்வமான விவகாரமான, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு அவசரமாக தீர்வு காணப்பட வேண்டியுள்ளது என்றும், கூறிய அவர், 15 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி ஒருவர் அண்மையில் நோயுற்ற நிலையில் மரணமானார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.