சஹ்ரானின் மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 27, 2019

சஹ்ரானின் மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை


இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி என்று இலங்கை அரசால் கூறப்படும் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியா, வழக்கு விசாரைணையின் நிதித்தம் கல்முனை நீதவான் நீதிமன்றில் நேற்று முதல் தடவையாக முன்னிலைப் படுத்தப்பட்டார். 

கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி அன்று, சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பில் சஹ்ரான் குழுவினர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்த சம்பவத்தில், சஹ்ரானின் 28 வயதுடைய மனைவி ஹாதியாவும் அவரின் மூன்று வயது மகளும் உயிர் தப்பியிருந்தனர். 

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கொழும்பிலிருந்து வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஹாதியா, நீதிமன்றின் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அவரிடம் மூடிய அறையில் விசாரணைகள் இடம்பெற்றன. 

இந்த வழக்கில் மேலும் மூன்று சாட்சியாளர்களிடமும், மூடிய அறையில் தனித்தனியாக விசாரணைகள் இடம்பெற்றன. 

வழக்கு விசாரணைகளின் பின்னர், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட ஹாதியாவிடம், அங்கு வாக்குமூலம் பெறப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். 

அந்த வாக்குமூலத்தில் சஹ்ரான் குழுவினருடன் பணக் கொடுக்கல் - வாங்கலில் ஈடுபட்டோர் குறித்தும், தாக்குதல் தொடர்பில் தான் அறிந்த விடயங்கள் பற்றியும் சஹ்ரானின் மனைவி தெரிவித்துள்ளதாகவும் கல்முனை பொலிஸாரிடம் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த வழக்கின் அடுத்த விசாரணை, எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.