மோடியை சந்திக்க விரும்பிய முஸ்லிம் தலைவர்கள்: நிராகரித்த இந்தியா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 9, 2019

மோடியை சந்திக்க விரும்பிய முஸ்லிம் தலைவர்கள்: நிராகரித்த இந்தியா!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நரேந்திர மோடியை சந்திப்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தபோதும், அதனை மோடி தவிர்த்துக் கொண்டார். தற்போதைய நிலைமையில் இந்த சந்திப்பு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், சந்திப்பை இந்தியா தவிர்த்துள்ளது.

நேற்று (9) நான்கு மணித்தியால குறுகிய பயணமாக இலங்கைக்கு வந்திருந்தார் நரேந்திர மோடி. இதன்போது, ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தனித்தனி சந்திப்புக்களை நடத்தினார். பயணத்தின்போது, காருக்குள் பிரதமருடன் பேசினார்.

ஆனால், மோடியின் பயணத்தின் போது இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் முஸ்லிம் தலைவர்களையும் மோடி சந்திப்பதாக செய்தி வெளியாகியிருந்தது. எனினும், அந்த சந்திப்பு நடக்கவில்லை. நேரமின்மை போன்ற காரணங்களை கூறி, இறுதி நேரத்தில் அந்த சந்திப்புக்கள் தவிர்க்கப்படவுமில்லை. முன்னரே, திட்டமிட்டு அவர்கள் சந்திப்புக்கு அழைக்கப்படவுமில்லை. இது நேற்று விவாதத்திற்குரிய விடயமாக இருந்தது.மோடியின் விஜயத்தில் ஏன் முஸ்லிம், மலையக பிரதிநிதிகளை சந்திக்கவில்லையென்பது குறித்த நம்பகரமான தகவல்களை இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தமிழ்பக்கம் பெற்றுள்ளது. இரண்டு தரப்பும் சந்திப்பிற்கு கோரிக்கை விடுத்தும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், எம்.பிக்கள் கூட்டாக மோடியை சந்திக்க விரும்பியிருந்தார்கள். இது குறித்த கோரக்கையை கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கும் விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை, புதுடில்லிக்கு இந்திய தூதரகம் அனுப்பியிருந்தது.

எனினும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, முஸ்லிம் தலைவர்கள் மோடியை சந்திக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளார் என்பதை தமிழ்பக்கம் அறிந்தது. தற்போதைய நிலையில், இந்த சந்திப்பு சிக்கலாகி விடலாமென இந்திய தரப்பு அச்சமடைந்ததே சந்திப்பு தவிர்க்கப்பட்டதற்கு காரணம். அங்கு பேசப்படும் விடயங்கள் வெளியில் கசிந்தால் சிக்கலாகி விடலாம் என்றும் கருதப்பட்டுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் தரப்பின் கோரிக்கையை மாத்திரம் தவிர்ப்பது நாகரிகமான முறையல்ல என்பதால், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையையும் சேர்த்தே தவிர்க்கப்பட்டுள்ளது. இரண்டு கோரிக்கைகளையும் தவிர்த்த இந்தியா, நேரமின்மை காரணமாக சந்திக்க முடியாது என பதிலளித்துள்ளது.

நேற்று சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்படுமென தமிழ் முற்போக்கு கூட்டணி உறுதியாக நம்பியிருந்தது. கடைசி நேரத்திலாவது அழைப்பு விடுக்கப்படலாமென அதன் பிரமுகர்கள் கருதியிருந்தனர். எனினும், முஸ்லிம் தலைவர்களின் சந்திப்பை தவிர்த்ததால், தனியே அவர்களின் சந்திப்பை தவிர்க்காமல் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சந்திப்பும் தவிர்க்கப்பட்டுள்ளது.