இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, June 8, 2019

இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி!



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையை வந்தடைந்துள்ளார். அவர் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம்!
இரண்டாவது முறையாகவும் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மாலைதீவிற்குச் சென்றுள்ள அவர் அங்கிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள மோடி சில மணித்தியாலங்களே இங்கு தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.

அங்கிருந்து அதிவேக நெடுஞ்சாலை வழியாக கொழும்புக்கு வரவுள்ள அவருக்கு ஜனாதிபதி செயலகத்தில் வரவேற்பளிக்கப்படவுள்ளது. அதனையடுத்து, இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.

இருதரப்பு பேச்சுக்களை அடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரையும் இந்தியப் பிரதமர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர், 3 மணியளவில் மீண்டும் அவர் இந்தியாவிற்கு பயணமாகவுள்ளார்.

இந்த விஜயத்தினை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதையடுத்து இடம்பெற்ற பதவியேற்கும் நிகழ்வில், இலங்கையிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குழுவொன்று குறித்த நிகழ்வில் கலந்துகொண்டது.

இதனையடுத்து இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மனோ கணேசன், ஆறுமுகம் தொண்டமான் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பிரதமர் மோடியை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.