காவிரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமை என்பது "நீர்வழி" பாதைக்கு உள்ள உரிமை, இது ஒப்பந்தப்படி மட்டுமல்ல, சர்வதேச நீரியல் பங்கீட்டு விதிகளின் படி நமக்குத்தான் முதல் உரிமை.
காவிரியின் குறுக்கே அறமற்ற முறையில் கர்நாடக பல அணைகளை கட்டி தமிழகத்திற்கு உரிமையுள்ள காவிரி நீரை தர மறுக்கிறது என்பது 100 சதவீதம் உண்மை.
இன்னொருபுறம் காவிரியில் ஓடும் நீரின் அளவு குறைந்துகொண்டே வருகிறது என்பதும் உண்மை, இதற்கு காரணம் என்ன?
மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள சுமார் 50,000 ஏக்கர் காடுகள் கடந்த 17ஆண்டுகளில் அழிக்கப்பட்டுள்ளன, இது எந்த அளவு என்றால், சுமார் 40,000 கால்பந்தாட்ட மைதானங்களின் அளவிற்கு மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 25,000 ஏக்கர் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அழிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஐந்தாண்டுகளில் அழிக்கப்பட்ட காடுகள், மேற்கு தொடர்ச்சி மலைகளின் முக்கியப்பகுதியாக கருதப்படும், கர்நாடகாவின் நான்கு மாவட்டங்கள், தக்ஷிண கன்னடா, உத்தர கன்னடா, குடகு மற்றும் உடுப்பி மாவட்டங்களில் உள்ளவை. இந்த பகுதிகளில்தான் காவிரியின் பிறப்பிடம் உள்ளீட்ட பல நீர்ப்பிடிப்பு பகுதிகள் உள்ளன, அதனால்தான் காவிரி வற்ற ஆரம்பித்துவிட்டது. இதோடு மரங்கள் அதிகமாக வெட்டப்பட்டால் 2லட்சம் டன் கார்பன் வெளியேறி புவியின் வெப்பம் உயர்வதுக்கும் காரணியாகியுள்ளது.
இந்த பகுதி ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதி, தமிழகத்திலும் கர்நாடகாவிலும் மட்டும் காவிரி ஆற்றை நம்பி சுமார் 10 கோடி மக்கள் வாழ்கிறார்கள், அவர்களின் குடிநீர் தேவைகள் மற்றும் விவசாயத்திற்கு மூல ஆதாரம் காவிரி. அதோடு கோடைகாலத்தின் முடிவில் தென்மேற்கு பருவமழையின் போக்கின் மீது ஆதிக்கம் செலுத்தும் பகுதியும் கூட. தென்னிந்திய மாநிலங்களிலுள்ள மக்களின் நாடித்துடிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகள் இருப்பதால்தான் யுனெஸ்கோ நிறுவனம் இதை "அதிமுக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாக்கப்படவேண்டிய பல்லுயிரியப் பகுதி" என்று அறிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளின் முக்கிய பகுதிகளை அழிப்பது தமிழ்நாட்டிற்கு மட்டும் கெடுதல் கிடையாது, தென்னிந்தியாவில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும்தான்.
என்ன செய்யப்போகிறோம் ?