இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 2 பேர், இந்தியாவுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு வர்த்தக விசாவில் வந்து சென்றிருப்பது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய விசாரணை அமைப்பு வட்டாரங்கள் கூறியதாவது:
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது, கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் கடந்த மாதம் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். இதில் வெளிநாட்டினர் உள்பட 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் நட்சத்திர விடுதிகளில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய இல்காம் அகமது முகமது இப்ராஹிம், அவரது மூத்த சகோதரர் இன்சாப் அகமது ஆகியோரும் அடங்குவர். இவர்கள் 2 பேரும், இந்தியாவுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 2012ஆம் ஆண்டில் வர்த்தக விசாவில் வந்து சென்றுள்ளனர்.
பெங்களூரு, கொச்சி, சென்னை, மும்பை, தில்லி ஆகிய நகரங்களுக்கு அவர்கள் வந்து சென்றுள்ளனர். ஆனால் இலங்கை ராணுவ தளபதி தெரிவித்தது போல, இருவரும் காஷ்மீருக்கு வரவோ அல்லது பயங்கரவாத பயிற்சி பெறவோ இல்லை.
இவர்கள் 2 பேரின் தந்தை, இலங்கையில் மசாலா நிறுவனம் நடத்தி வருகிறார். கொழும்புவை தலைமையிடமாகக் கொண்டு அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து, அவரை இலங்கை பொலிஸார் கைது செய்துவிட்டனர்.
அவரது நிறுவனம், இந்தியாவின் நம்பகமான வர்த்தக நிறுவனங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. கேரளா முதல் தில்லி வரையிலும் அவரது நிறுவனத்துக்கு வர்த்தக தொடர்பு உள்ளது.
குண்டுவெடிப்புகளை நடத்திய பயங்கரவாதிகள், இந்தியா வந்து சென்றதாக இலங்கை தெரிவித்துள்ள நிலையில், அவர்களிடம் மேலும் இதுகுறித்து தகவல் இருக்கலாம் எனத் தெரிகிறது.
அந்தத் தகவல், தெற்காசிய பிராந்திய பாதுகாப்புக்கு உதவியாக இருக்கலாம் எனவும் தெரிகிறது. இதனால் அந்த 2 பேரும், இந்தியாவுக்கு வந்து சென்றது, எதற்காக வந்தனர் என்பது தொடர்பான விவரங்கள் இலங்கையிடம் கோரப்பட்டுள்ளது என்று மத்திய விசாரணை அமைப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டன.