தீவிரவாத அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில், மர்மமாக உலா வந்த கார் ஒன்று போலீசாரிடம் சிக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன், தீவிரவாதிகளால் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. தேவாலயம் மற்றும் நட்சத்திர விடுதிகள் என பல்வேறு இடங்களை குறி வைத்து அடுத்தடுத்து தீவிரவாதிகள் குண்டு வெடிப்பை நிகழ்த்தினர்.
இதில், சுமார் 360 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இன்னும் நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை மட்டுமல்லாது உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிறகு தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள் உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இங்கும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல்களே இதற்கு காரணம்.
இந்த சூழலில் கேரள மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பரபரப்பை அதிகமாக்கியுள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உலா வந்து கொண்டிருந்த கார் ஒன்றை போலீசார் தற்போது பறிமுதல் செய்துள்ளனர்.
கேரள மாநில போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பழைய தலைமுறை ஹோண்டா அக்கார்டு (Honda Accord) கார் ஆகும். சாம்பல் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த காரின் பூட் லிட்டில், சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனின் முகம் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த கார் சமீப காலமாக இங்கு மர்மமான முறையில் உலா வந்து கொண்டிருந்தது. இந்த கார் சாலையில் பயணித்து கொண்டிருந்தபோது, ஒசாமா பின்லேடனின் ஸ்டிக்கர் இருப்பதை மற்றொரு வாகனத்தில் இருந்த ஒருவர் கவனித்துள்ளார்.
உடனே அவர் அதனை புகைப்படமும் எடுத்துள்ளார். இதுதொடர்பான தகவல் எங்களுக்கு கிடைத்ததை அடுத்து நாங்கள் விசாரணையில் இறங்கினோம். ஒசாமா பின்லேடனின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த கார் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள'' என்றனர்.
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள கார், கேரளாவிற்கு மாறாக மேற்கு வங்க மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீசாரின் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த கார் போலீசாரின் கஸ்டடிக்கு கொண்டு வரப்பட்டபோது, மூன்று பேர் காருக்குள் இருந்தனர்.
உடனே அவர்கள் மூவரையும் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களை அவர்கள் மூவரும் வெளியிட்டனர். கேரளாவில் பள்ளிமுக்கு என்ற இடம் உள்ளது. அந்த ஊரை சேர்ந்த ஒருவரிடம் இருந்துதான் இந்த காரை வாடகைக்கு எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் திருமண நிகழ்ச்சி ஒன்றை முன்னிட்டு இந்த காரை வாடகைக்கு எடுத்ததாகவும் அவர்கள் கூறினர். இதனை தொடர்ந்து காரின் உண்மையான உரிமையாளரை போலீசார் கண்டறிந்தனர். அதன்பின் அவரிடமும் தீவிர விசாரணையை தொடங்கினர்.
அப்போது இந்த காரை சுமார் ஓராண்டுக்கு முன்பு, மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வாங்கியதாக, அதன் காரின் உரிமையாளர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட காருக்கு இன்னும் என்ஓசி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அடிக்கடி பயன்படுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது.
இதனிடையே கார் பறிமுதல் செய்யப்பட்டபோது அதனுள் இருந்த 3 பயணிகளும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.