இன வன்முறை ஏற்பட்டுள்ள குருணாகலின் தற்போதைய நிலவரம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, May 13, 2019

இன வன்முறை ஏற்பட்டுள்ள குருணாகலின் தற்போதைய நிலவரம்


குருணாகல் பகுதியில் இடம்பெற்ற தொடர் வன்முறை சம்பவங்களினால் அப்பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்றமான சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆனாலும் தொடர் பாதுகாப்பு பணிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குருநாகல் பகுதியில் நேற்றும் நேற்று முன்தினம் இடம்பெற்ற சில வன்முறைச் சம்பவங்கள் அனைத்து மக்களிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இச்சம்பவம் ஏனைய பகுதிகளிலும் பரவியமையால் சில தகராறுகள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆகையால் குறித்த பகுதிகளுக்கு மாத்திரம் அமுல்படுத்திருந்த ஊரடங்கு சட்டத்தை நாடு முழுவதிலும் அமுல்படுத்தியதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை அனைத்து மக்களும் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென அரசும் அரசியல் தலைவர்களும் மத தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இத்தகைய சம்பவங்களினால் வெளிநாட்டு சக்திகளுக்கே வாய்ப்பாக அமையும். ஆகையால் அனைவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டுமென அஸ்கிரிய மகாநாயக்க தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இளைஞர்கள் சட்டத்தை கையிலெடுத்து மீண்டுமொரு கறுப்பு ஜுலையை உருவாக்கிட வேண்டாமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வன்முறை சம்பவங்களினால் வணக்கஸ்தலங்கள் மற்றும் வணிக நிலையங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.