ஊடகங்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதோடு மிகைப்படுத்திய செய்திகளை வெளிக்காட்டுவதை தவிர்த்து நாட்டை சுபீட்சமான பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தமது பணிகளை மேற்கொள்வதன் மூலமே அவசியமற்ற பீதியை இந்த நாட்டில் இல்லாதொழிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இன்று (வியாழக்கிழமை) மாலை கொள்ளுப்பிட்டி மென்டரின் விடுதியில் ஊடகவியலாளர் மாநாட்டினை நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாடு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவசரமாக இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டிய தேவையுள்ளது என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் சாதாரணமான குற்றச் செயல்களை புரியக்கூடிய ஆயுதங்கள் மற்றும் தற்காப்பு ஆயுதங்கள் முஸ்லிம்களின் வீடுகளில் இருந்து தேடுதலின் போது கிடைத்தால் அதனைக்காட்டி பயங்கரவாதத்திற்கு தயாராகும் சமூகமாக முஸ்லிம் சமூகம் காட்டப்படுவது வேதனையானது. நடுநிலைத் தன்மையுடன் இந்த விடயங்கள் பார்க்கப்பட வேண்டும்.
சமூக மட்டத்தில் எத்தகைய முழு ஆதரவை நாம் வழங்க முடியுமோ அந்த அளவுக்கு வழங்கி வருகின்றோம். மிலேச்சத்தனமான இந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பூண்டோடு ஒழிக்கவேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்