இலங்கையில் கடந்த வாரம் நடத்தப்பட்டத் தாக்குதலை நியாயப்படுத்தி, இணையத்தில் காணொளியை வெளியிட்ட மௌலவி ஒருவர், மத்திய கிழக்கு நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளாரென்று தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா- செட்டிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், பட்டானிச்சூர் பள்ளிவாசலின் பிரதானி என்றும், தாக்குதல் நடத்தப்பட்ட தினத்துக்கு மறுநாள் , உலகமே இஸ்லாம் நாடாக மாற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு தனது கௌரவத்தையும், மகிழ்ச்சியையும் தெரிவிப்பதாக தெரிவித்து, இவரால் காணொளியொன்று வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, இந்த காணொளி தொடர்பில் பல தரப்பினரும் செய்த முறைபாட்டையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டப் போதே அவர், மக்காவுக்கு சென்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
எனினும் குறித்த மௌலவி நாடு திரும்பியதும் அவரைக் கைதுசெய்வதற்கான நீதிமன்ற உத்தரவை பொலிஸார் பெற்றுள்ளதுடன், இவர் தொடர்பில் விமான நிலைய பாதுகாப்பு பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மௌலவி தௌஹீத் ஜமா அத் அமைப்பின் உறுப்பினர் ஆவார்.