தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றுமுழுதாக அழித்துள்ள நிலையில் எதற்காக 5 வருட தடையை இந்திய அரசு நீடித்துள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் இந்திய அரசின் குறித்த உத்தரவானது தமிழர்களை திட்டமிட்டு அவமதிக்கும் செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்த பொழுது இவ்வாறு 5ஆண்டுகால தடையை நீடித்தார்கள் என தெரிவிக்கும் அவர், பா.ஜ.கவும் அதனையே பின்பற்றுவதாக குறிப்பிட்டார்.
இந்திய அரசின் குறித்த உத்தரவானது தமிழர்களின் ஜனநாயக உரிமை ரீதியான அரசியல் போராட்டங்களைக்கூட முன்னெடுக்கமுடியாத நெருக்கடியான சூழ்நிலையைத்தான் தற்பொழுது உருவாக்கியுள்ளது. இதனை இந்திய அரசு திட்டமிட்டு மேற்கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியா போன்ற ஒரு வல்லரசு நாடு எல்லா நாடுகளுக்கும் முன் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை நீடிக்கும் பொழுது சர்வதேச சமூகத்தின் முன் புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு பார்க்கப்படுவார்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசு 5 ஆண்டுகளுக்கு நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.